தேடுதல்

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்   (AFP or licensors)

முன்னாள் திருத்தந்தையின் இறுதிச்சடங்கில் சில மாற்றங்கள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல் சைப்ரஸ் மரத்தாலான அடக்கப்பெட்டியில் வைக்கப்படும் பொருட்களின் விவரங்கள் பற்றியும் செய்தியாளர்களுக்கு எடுத்துரைத்துள்ளார் மத்தேயோ புரூனி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறைபதம் சேர்ந்துள்ள முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றவிருக்கும் இறுதிச்சடங்குத் திருப்பலி குறித்த நிகழ்வுகளைத் திருபீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இறுதிச்சடங்குத் திருப்பலி குறித்த நிகழ்வுகளில் இறைபதம் சேர்ந்துள்ள முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் வாழ்வுக்குப் பொருத்தமான புதிய நிகழ்வுகள் சில சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாவும் ஜனவரி 13, இச்செவ்வாயன்று நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.

இதன்படி திருப்பலிக்கான கையேடுகளில் சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன என்றும், உரோம் மறைமாவட்டம் மற்றும் கீழைவழிபாட்டு முறை திருஅவைகளுக்கான வேண்டுதல்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார் இயக்குநர் மத்தேயோ புரூனி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலிக்குத் தலைமையேற்று, மறையுரை ஆற்றி, முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களுக்கு இறுதிச்சடங்குகளை நிறைவேற்றி பிரியாவிடை வழங்குவார் என்றும், இயேசு சிலுவையில் தொங்கும்போது  “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று லூக்கா நற்செய்தியில் அவர் கூறும் வார்த்தைகள் நற்செய்தி வாசகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மத்தேயோ புரூனி.

மேலும், “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு கூறிய இறுதி வார்த்தைகளும் நற்செய்தி வாசகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், இவ்வார்த்தைகள் "ஆண்டவரே, நான் உம்மை அன்புகூர்கிறேன்" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்குமுன் கூறிய கடைசி வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருக்கின்றன என்றும் கூறியுள்ளார் மத்தேயோ புரூனி.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல் சைப்ரஸ் மரத்தாலான அடக்கப்பெட்டியில் வைக்கப்படுவது பற்றியும், அப்பெட்டியில் வைக்கப்படும் பொருள்களின் விவரங்கள் பற்றியும் செய்தியாளர்களுக்கு எடுத்துரைத்துள்ளார் மத்தேயோ புரூனி.

ஜனவரி 3, இச்செவ்வாய் வரை, புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலி பீடத்தின் முன் வைக்கப்பட்டுள்ள மறைந்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின்  உடலுக்கு ஏறத்தாழ ஒரு இலட்சற்கும் அதிகமான மக்கள் அஞ்சலி செலுத்தி, அவரின் ஆன்மா இறைவனில் நிறையமைதி அடைய இறைவேண்டல் செய்து வருகின்றனர் என்றும், ஜனவரி 4, இப்புதன் மதியவேளைக்குப் பிறகு அவரது உடல் சைப்ரஸ் மரத்தாலான அடக்கப்பெட்டியில் வைக்கப்படும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2023, 13:56