வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 16ம் பெனடிக்ட்டின் இறுதிச்சடங்கு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
1802 ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை ஆறாம் பயஸின் இறுதிச் சடங்கை பணியிலிருந்த திருத்தந்தை ஏழாம் பயஸ் நிகழ்த்தியதுபோன்று ஜனவரி 5, இவ்வியாழனன்று முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் இறுதிச்சடங்கை இந்நாள் திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றுகிறார் என்று வத்திக்கான் வானொலியின் செய்தித் தொடர்பக இயக்குனர் Andrea Tornielli தெரிவித்துள்ளார்.
ஜனவரி 5, இவ்வியாழனன்று நிகழ்ந்த இறைபதம் சேர்ந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் இறுதிச்சடங்கு குறித்த செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள Tornielli அவர்கள், இந்நிகழ்வு இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றின் பின்னணியில் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது பிப்ரவரி 1802-இல் நிகழ்ந்தது. திருத்தந்தை ஆறாம் பயஸின் இறுதிச்சடங்கின் திருப்பலியானது அவருக்கு அடுத்து வந்த திருத்தந்தையான ஏழாம் பயஸ் அவர்களால் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்தப்பட்டது என்றும், மறைந்த திருத்தந்தை ஆறாம் பயஸ் 1775-ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்வுசெய்யப்பட்டு நீண்ட காலம் ஆட்சி செய்த நிலையில் நெப்போலியனால் நாடுகடத்தப்பட்டு கைதியாக இறந்தார் என்று தனது செய்தியில் தெரிவித்துள்ளார் Tornielli
அவரது மரணத்திற்குப் பிறகு உடனடியாக Valence நகரில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதேநேரத்தில் கர்தினால்கள் அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்காக ஒன்றுகூடிய நகரமான Venice-இல் மறைந்த திருத்தந்தைக்கு துக்கமும் அனுசரிக்கப்பட்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ள Tornielli அவர்கள், 1800 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை ஏழாம் பயஸ், முன்னாள் திருத்தந்தையான ஆறாம் பயஸின் உடலின் எஞ்சிய பகுதிகளை மீண்டும் உரோமைக்கு கொண்டு வர விரும்பினார். ஆகவே 1801 டிசம்பரில் அவரது கல்லறை தோண்டி எடுக்கப்பட்டு, Valence நகரிலிருந்து Marseilles மற்றும் அங்கிருந்து கப்பல் வழியாக ஜெனோவாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் தனது செய்தியில் கூறிப்பிட்டுள்ளார்
மேலும், இத்தாலி வந்தடைந்த அவரது உடலின் எஞ்சிய பகுதிகள், ஒரு வெற்றியின் திருப்பயணமாக உரோமையை நோக்கிப் புறப்படத் தொடங்கியது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவ்வுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு 1802- ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி வியக்கத்தக்க வெற்றியின் பயணமாக புனித பேதுரு பெருங்கோவிலை வந்தடைந்தது. அங்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட திருத்தந்தை ஏழாம் பயஸ் அவர்களின் தலைமையில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்றும் தனது செய்தியில் விவரித்துள்ளார் Tornielli
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்