அமைதிக்கான புதிய வழிகளைக் காண்போம்! : கர்தினால் பரோலின்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரேனில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சகோதரப் போர் மற்றும் உலகம் முழுவதும் வளர்ந்துவரும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டு, ஐரோப்பா அமைதியின் புதிய பாதைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
டிசம்பர் 13, இச்செவ்வாயன்று, திருப்பீடத்திற்கான இத்தாலியத் தூதரகம், வத்திக்கான் ஊடகம் மற்றும் இத்தாலிய புவிசார் அரசியல் இதழான ‘லைம்ஸ்’ ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிகழ்த்திய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் கர்தினால் பரோலின்.
கடந்த ஒன்பது மாதங்களாக, இரஷ்ய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்பின் தொடக்கத்திலிருந்தே, இந்தப் போரின் தவறுகள்' மற்றும் பயங்கரங்களைத் திருப்பீடம் கண்டு வருவதாகக் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், நாட்டில் அழிவுகரமான ஏவுகணைகள், பொதுமக்கள் பலர் இறப்பது, குழந்தைகள் இடிபாடுகளுக்கு அடியில் விடப்படுவது, இராணுவ வீரர்கள் கொல்லப்படுவது, இடம்பெயர்ந்த மக்கள், மற்றும் ஒரு நாட்டின் அழிவு பற்றிய செய்திகளுக்கு நாம் அரிதாகவே கவனம் செலுத்துகிறோம் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
டிசம்பர் 08-ஆம் தேதி சிறப்பிக்கப்பட்ட புனித கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமையிலுள்ள இஸ்பானிய வளாகம் சென்று உக்ரைனுக்காகச் செபித்தபோது கண்ணீர் சிந்தியதை நினைவு கூர்ந்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், போர்நிறுத்தம் மற்றும் அமைதியை அடைய அனைத்துத் தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
1965-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவைக்குத் திருத்தந்தை ஆறாம் பவுல் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்கத் திருத்தூதுப் பயணத்தின்போது அவர் நிகழ்த்திய உரையில், ஒருபோது போர் வேண்டாம், அமைதி மட்டுமே எப்போதும் மனித குலத்தை வழிநடத்தவேண்டும் என்று கூறியதை மேற்கோள்காட்டி தனது உரையை நிறைவு செய்துள்ளார் கர்தினால் பரோலின்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்