திருத்தந்தையின் தர்மச்செயலாளர் உக்ரைனுக்கு குளிர்கால ஆடைகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்புக்களை இரஷ்யா தாக்கி வருவதால், மின்சக்தி துண்டிப்புக்களுக்கு மத்தியில் கடும் குளிரில் வாழ்ந்துவரும் உக்ரேனியர்களுக்கு உதவுவதற்கு கடும்பனி, மற்றும், கடுங்குளிரைத் தாங்கக்கூடிய மேலங்கிகளை, திருத்தந்தையின் அறச்செயல்களுக்குப் பொறுப்பான சிறப்பு அலுவலகம் சேகரித்து வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் கடுங்குளிர் காலம் தொடங்கியுள்ளவேளை, வெப்பமூட்டும் கருவிகளை இயக்கமுடியாத சூழலில் அந்நாட்டு மக்கள் இக்குளிர் காலத்தில் வாழ்வதற்குத் தேவையான ஆடைகளைச் சேகரிக்கும் புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக, திருப்பீட பிறரன்புப் பணித் துறை அறிவித்துள்ளது.
உக்ரேனியர்களுக்கென்று சேகரிக்கப்படும் குளிராடைகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் பெரிய லாரிகளில் அந்நாட்டுக்கு அனுப்புவதற்கும் அத்துறை தீர்மானித்துள்ளது.
வெப்பமூட்டும் கருவிகளின் செயல்பாடின்றி
உக்ரேனியர்கள் போரால் மட்டுமன்றி, மின்சக்தி, எரிவாயு, கடுங்குளிர் ஆகியவற்றோடு தொடர்புடைய அவசரகால நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றனர் என்று, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Konrad Krajewski அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
ஆண்கள், பெண்கள் மற்றும், சிறாருக்குத் தேவையான மேலாடைகளை, குறிப்பாக அவர்கள் பனிச்சறுக்குக்குப் பயன்படுத்தும் மேலாடைகளைச் சேகரித்து வருவதாக கர்தினால் Krajewski அவர்கள் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள ஏறத்தாழ எழுபது இலட்சம் பேர் ஏற்கனவே உறையவைக்கும் குளிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இவ்வாண்டு நவம்பரில் உக்ரைனின் அனைத்து, அதாவது அந்நாட்டின் 15 அணு உலைகள் போரால் முதன்முறையாகத் தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனின் அணுமின் நிலையங்களில் ஐம்பது விழுக்காடு ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்