கீவ் திருப்பீடத் தூதர்: உக்ரைனுக்கு உண்மையான அமைதி தேவை
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் பல்வேறு எரிசக்தி உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உறைபனி, கடுங்குளிர், மின்சாரமின்மை, வெப்பமூட்டும் கருவிகள் செயலிழப்பு போன்றவை இருக்கின்ற நிலையிலும் மக்கள், தங்களின் தினசரி வாழ்வுக்குத் திரும்பியுள்ளனர் என்று, அந்நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas அவர்கள் கூறியுள்ளார்.
போரும் கடுங்குளிரும் மக்களைத் தாக்கி வந்தாலும் அவற்றுக்கு மத்தியில் மக்கள் திருப்பலிக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்றும், Dnipro ஆற்றுக்குப் பின்னால் சூரியன் மறையத் தொடங்கும் மாலை 3.30 மணியளவில் கீவ் நகரெங்கும் இருளாக உள்ளது என்று பேராயர் Kulbokas அவர்கள் கூறியுள்ளார்.
அமைதி குறித்து நம்பிக்கை
அமைதிக்காக நாம் செபிக்கவேண்டும், அமைதி உருவாகும் என்று நம்பவேண்டும் என்று தெரிவித்துள்ள பேராயர் Kulbokas அவர்கள், வருங்காலத்தில் மேலும் போர்கள் எழக்கூடிய சூழலை உருவாக்கும் போலி அமைதி அல்ல, உண்மையான அமைதி தேவை என்று கூறியுள்ளார்
இரஷ்யா போர் நிறுத்தம் குறித்து சிந்திப்பதாகவே சமூக ஊடகங்களில் பார்க்கிறேன், இது உக்ரேனியர்களில் உண்மையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் பேராயர் வத்திக்கான் செய்திகளிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, Lviv நகரின் மேயர் Andriy Sadovyi அவர்கள் வத்திக்கான் செய்திகளிடம் பேசியபோது, போர் தொடங்கியதிலிருந்து, ஏறத்தாழ 11 ஆயிரம் காயமடைந்தவர்கள் உட்பட ஏறத்தாழ ஐம்பது இலட்சம் பேர் இந்நகரைக் கடந்து சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்நகரின் அணுமின் நிலையங்களும் இரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்