சான் எஜிதியோ கிறிஸ்மஸ் மதிய உணவில் கர்தினால் பரோலின்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உரோம் புனித எஜிதியோ பிறரன்பு அமைப்பு நடத்திய கிறிஸ்மஸ் மதிய உணவு நிகழ்வில் பங்கெடுத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நம் அனைவருக்கும் ஒருமைப்பாடும் அன்பும் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
கிறிஸ்மஸ் பெருவிழா நாளில், உரோம் நகரின் Trastevere புனித மரியா ஆலயத்தில் கடந்த ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கிவரும் நிகழ்வு நாற்பது ஆண்டுகளாக இடம்பெற்றுவருகிறது. டிசம்பர் 25, இஞ்ஞாயிறன்று நடந்த மதிய உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், துன்புறுவோரோடு உடனிருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
இம்மதிய உணவு நிகழ்வில், உரோம் நகரில் வாழ்கின்ற ஏழைகள், வீடற்றோர் மற்றும் வயதுமுதிர்ந்தோர் என ஏறத்தாழ 300 பேரும், பல உக்ரைன் புலம்பெயர்ந்தோரும் பங்குபெற்றனர்.
இந்நிகழ்வில் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், சான் எஜிதியோ குழுமம் மதிய உணவு வழங்கும் நிகழ்வை 2015ஆம் ஆண்டில் பார்வையிட்டதை நினைவுகூர்ந்து, மக்கள் ஒருசேர கிறிஸ்மஸ் கொண்டாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
நம் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு, மற்றவர் குறிப்பாக, துன்புறுவோர் மற்றும், தேவையில் இருப்போர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு நம் உடனிருப்பைத் தெரிவிப்பதாகும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.
இந்நிகழ்வு 1982ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நாளில் இத்தாலியில் எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட வறியோருக்கும், உலகெங்கும் 2,50,000 வறியோருக்கும் சான் எஜிதியோ அமைப்பின் தன்னார்வலர்களும் பணியாளர்களும் மதிய உணவு அளித்து வருகின்றனர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்