போரின் துயரத்தின் பிடியில் வாழும் உக்ரைன் மக்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுடன் எப்போதும் உடனிருக்க விரும்புகின்றார் என்று வத்திக்கான் செய்தியிடம் கூறியுள்ளார் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski.
போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக உக்ரைனின் மேற்குப் பகுதியிலுள்ள Lviv நகருக்கு டிசம்பர் 19, திங்களன்று சென்ற கர்தினால் Krajewski அவர்கள், தனது பணிகளை முடித்துவிட்டு உரோமைக்குத் திரும்பும் வேளை இவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரைன் மக்களை அவர்களின் இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், அவர்களுடன் இறைவேண்டல் செய்யவும், உடனிருக்கவும், இணைந்து துன்புறவும் தான் மிகவும் ஆவல்கொள்வதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்கு அனுப்பியுள்ள வாட்ஸப் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார் கர்தினால் Krajewski.
மேலும், Lviv நகரிலுள்ள பெரிய கட்டிடங்கள் வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் இருப்பதையும், கழிவறைக்குக் கூட செல்ல முடியாத மனிதர்களையும் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார் கர்தினால் Krajewski.
Lviv நகருக்கு தன்னால் முடிந்த மின்னாற்றலை இயக்கும் அனைத்து கருவிகள் மற்றும் கடுங்குளிரைத் தாங்கும் ஆடைகளைக் கொண்டுவந்தேன் என்றும், தனது வாகனம் முழுக்க தெர்மல் ஆடைகளுடன் கியேவ் நகருக்கு வந்து எல்லாவற்றையும் காரித்தாஸ் அமைப்பிடம் வழங்கிவிட்டதாகவும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் Krajewski.
தான் கியேவ் நகருக்குத் திரும்பியபோது, தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை என்றும், நடந்து செல்வதே மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றது. அந்தளவுக்கு வழியெங்கும் தடைகள் அதிகம் உள்ளன என்றும், அந்நகரில் நிகழும் இருள்சூழ்ந்த சூழல் பற்றி எடுத்துரைத்துள்ள கர்தினால் Krajewski அவர்கள், பகல் பொழுதிற்காக மக்கள் காத்துக்கிடக்கின்றனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்