எய்ட்ஸ், காச நோயாளிச் சிறாருக்கு தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட.
மேரி தெரேசா: வத்திக்கான்
எய்ட்ஸ் நோய், மற்றும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குத் தகுந்த சிகிச்சைகள் வழங்கப்படவும், அந்நோய்க் கிருமிகளின் பாதிப்பு குறித்து தொடக்க காலத்திலே கண்டறியப்படவும் நாடுகளும் பன்னாட்டு அமைப்புகளும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்படுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விரு நோய்க் கிருமிகளோடு வாழ்கின்ற சிறாருக்குச் சிகிச்சையளிப்பது, மற்றும், அக்கிருமிகளின் பாதிப்பைத் தொடத்திலேயே கண்டுபிடிப்பது குறித்து, வத்திக்கானின் நான்காம் பியோ மாளிகையில் டிசம்பர் 5, இத்திங்களன்று தொடங்கியுள்ள மூன்று நாள் பன்னாட்டு கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Fortunatus Nwachukwu அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜெனீவாவிலுள்ள ஐ..நா. நிறுவனங்கள், மற்றும், சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றிவரும் பேராயர் Nwachukwu அவர்கள், இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ள “சிறார்க்கு திருப்பீடத்தின் அக்கறை” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் ஆற்றிய உரையில் இத்தகைய நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்குவதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
டிசம்பர் 7, இப்புதனன்று நிறைவடையும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் சமயத் தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், மத நிறுவனங்கள் என அனைத்தும், HIV மற்றும் காசநோய்க் கிருமிகளின் பாதிப்புக்களால் இடம்பெறும் இறப்புகளைத் தடுத்து நிறுத்த மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் பேராயர் Nwachukwu.
இந்நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குத் திருப்பீடத்தின் அர்ப்பணம் குறித்து குறிப்பிடவேண்டுமெனில், திருப்பீடம் நற்செய்தியின் அடிப்படையில் அச்சிறாருக்கு அப்பணிகளை ஆற்றி வருகின்றது என்றும், முதல் கிறிஸ்தவ சமூகங்கள் தங்கள் மத்தியில் வாழ்கின்ற கைம்பெண்கள், மற்றும் கைவிடப்பட்ட சிறாரைக் கவனிப்பதற்கு திருத்தொண்டர்களை நியமித்தது குறித்தும் எடுத்துரைத்துள்ளார், பேராயர் Nwachukwu.
திருப்பீடத்தின் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் 2022ஆம் ஆண்டின் அறிக்கையின்படி உலகின் அனைத்துப் பகுதிகளிலுள்ள தலத்திருஅவைகளின் கண்காணிப்பில் இருபதாயிரம் சிறார் பராமரிப்பு இல்லங்கள், மற்றும், ஏறக்குறைய இருபதாயிரம் மருத்துவ அமைப்புகள் உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை தாய்சேய் நலஅமைப்புகள் என்றும் பேராயர் Nwachukwu அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்