கிறிஸ்தவரும் சீக்கியரும் பல்சமய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க...
மேரி தெரேசா: வத்திக்கான்
கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும், பொது நலனுக்காக பல்சமய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிணைந்து செயலாற்றுமாறு, பல்சமய உரையாடல் திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், அம்மதத்தின் முதல் குருவுமான, குரு நானக் பிரகாஷ் திவாஸ் அவர்களின் பிறந்த நாள், நவம்பர் 08, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, உலகெங்கும் வாழ்கின்ற சீக்கியர்களுக்கு வெளியிட்டுள்ள நல்வாழ்த்து செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் Miguel Ángel.
பல்சமய ஒருமைப்பாடு, முதலில் குடும்பங்களில் பேரார்வத்துடன் தொடங்கப்படவேண்டும், ஏனெனில், குடும்பங்களே, சமூக வாழ்விற்கு அடிப்படையான முதல் கல்வி நிலையம் என்றும், தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர், வயதுமுதிர்ந்தோர் ஆகியோரால் வழிநடத்தப்படுகின்ற குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்குள் வேறுபாடுகள் இருப்பதையும் தவிர்த்து, குடும்பத்தில் அனைவரின் நலனுக்காகத் தோழமையைக் கட்டியெழுப்ப உதவும் விழுமியங்களைக் கற்றுக்கொள்கின்றனர் என்றும் கர்தினாலின் செய்தி கூறுகின்றது.
கல்வி நிலையங்களும், உருவாக்கும் பயிற்சி மையங்களும், பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதற்கு முக்கிய தளங்கள் எனவும், இவ்விரு தளங்களில் மாணவர்கள், பன்மைத்தன்மையில் ஒருமைப்பாடு மற்றும், ஒற்றுமை உணர்வைக் கற்றுக்கொள்ள முடியும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சமுதாயம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில், சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கமுடியும் என்று கூறியுள்ள கர்தினால் Miguel Ángel அவர்கள், பேரிடர்கள் மற்றும், அவசரகால நெருக்கடி நேரங்களில், பல்சமய ஒருமைப்பாட்டுணர்வு அண்மைக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
1469ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் Tanwandiயில் பிறந்த குரு நானக் அவர்களின் பிறந்த நாள், Katak நிலவு மாதத்தில் பௌர்ணமி (முழு நிலவு) அன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்நாள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்