ஒரே நற்செய்தியை வாசிக்கும் இரு நாடுகளுக்கிடையே இடம்பெறும் போர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
உக்ரைனில் ஒன்பது மாதங்களாக இடம்பெற்றுவரும் போர், பொதுவான திருமுழுக்கைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்கு இடையே மனக்காயங்களைத் திறந்துவிட்டுள்ளது என்று, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி, இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்ததிலிருந்து தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடுமையான போர், விரைவில் ஒன்பது மாதங்களை எட்டவுள்ளவேளை, அப்போர் உலக அளவில் உருவாக்கியுள்ள பாதிப்புக்கள் குறித்து வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்ட தொர்னியெல்லி அவர்கள், மத நம்பிக்கையும், மத மரபும் சாதாரணமானதாக ஒருபோதும் கருதப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஒன்பது மாதங்கள் என்பது, மனித வாழ்வு தாயின் உதரத்தில் முழுவடிவம் பெறுவதற்குரிய காலமாகும் என்றும், அதே கால அளவில் உக்ரைனில் மனித வாழ்வு பேணிப் பாதுகாக்கப்படவில்லை, மாறாக, மரணம், காழ்ப்புணர்வு, மற்றும், பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது என்றும், தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.
ஒரே பொதுவான கிறிஸ்தவம்
கிறிஸ்துவில் ஒரே நம்பிக்கையையும், ஒரே திருமுழுக்கையும் பெற்றுள்ள இரு நாடுகளின் மக்களுக்கு இடையே இடம்பெற்றுவரும் இப்போரின் ஒரு பக்கத்தை நாம் எப்போதும் நினைவில் இருத்துவதில்லை என்றும், இப்போர் இடம்பெற்றுவரும் புவியியல் பகுதியின் கிறிஸ்தவம், கி.பி.988ஆம் ஆண்டில் Rus மக்கள் (கிழக்கு ஐரோப்பாவில் மத்திய காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த இனக்குழு) திருமுழுக்குப் பெற்றதோடு தொடர்புடையது என்றும் தொர்னியெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவ்வாண்டில் அரசர் பெரிய விளாடிமிர், Khersonல் திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெற்றபின்னர், தனது குடும்பமும், கீவ் மக்களும் அதே அருளடையாளத்தை Dniepe ஆற்றுத் தண்ணீரில் பெறவிரும்பினார் என்றுரைத்துள்ள தொர்னியெல்லி அவர்கள், கிழக்கு வழிபாட்டு மரபுகளைக் கொண்டுள்ள இரஷ்யர்களும், உக்ரேனியர்களும் ஒரே இறைவழிபாட்டையும், ஆன்மிகத்தையும் பகிர்ந்துகொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பொதுவான தொடர்பு, இன்று போர் பரப்புரை தொடர்புடைய காரணங்களால் மறைக்கப்படும் போக்கு நிலவுகிறது எனவும், அமைதியின் இறைவாக்கினராகிய ஆயர் Don Tonino Bello கூறுவதுபோல, போரில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கொலைசெய்யும்போது மற்றவரின் முகமும், மனிதமும் மறக்கப்படுகின்றன எனவும் தொர்னியெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.
போரை நடத்தும்போது, ஒரே திருமுழுக்கைப் பெற்றுள்ள அடுத்தவரை மறக்கின்றோம், ஐரோப்பாவில் இடம்பெற்றுவரும் இப்போர், கிறிஸ்தவர்களுக்கு இடையே இடம்பெறும் போர் என்றும், இது உருவாக்கியுள்ள காயம், இயேசுவைப் பின்செல்பவர்களுக்கு மிகவும் வேதனையளிக்கின்றது என்றும் தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.
தாக்கப்படுகின்றவர்கள் வாசிக்கின்ற ஒரே நற்செய்தியைத் தான் தாக்குபவர்களும், வாசிக்கின்றனர் என்றுரைத்துள்ள, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் தொர்னியெல்லி அவர்கள், உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள காயங்கள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்