நம்பிக்கை மற்றும், ஒத்துழைப்பின் சூழலை உருவாக்குவோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அனைத்துலக காரித்தாஸ் அமைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுவந்துள்ள மாற்றம் என்பது, அவரின் கவனமான மற்றும், சுதந்திரமான ஆய்வுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டதாகும் என்று கூறியுள்ளார், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
நவம்பர் 22, இச்செவ்வாயன்று Villa Aurelia-வில் நடைபெற்ற அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் நிர்வாக அவை ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில், திருத்தந்தையின் ஆணையை வாசித்தபோது இவ்வாறு கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், பாலியல் முறைகேடு மற்றும், தவறான நிதி நிர்வாகம் குறித்த கேள்விக்கே இடமில்லை என்றும் இம்மாற்றம் குறித்துத் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.
இந்தச் செய்தி உங்களில் சிலருக்குச் சற்று கவலையாகவோ அல்லது குழப்பமாகவோ இருக்கலாம். ஆனால், தலைமைச் செயலகத்தின் பணிச்சூழல், பொறுப்பான நபர்கள் மற்றும் அமைப்புகளால் செயல்படுத்தப்படும் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனமாகவும் சுதந்திரமாகவும் ஆய்வுசெய்த பிறகே திருத்தந்தையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதில் உறுதியாக இருங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் தாக்லே.
உலகெங்கிலுமுள்ள ஏழைகள் மற்றும், புறக்கணிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதில் காரித்தாஸ் அமைப்பு தொடர்ந்து எதிர்கொண்டுவரும் சவால்களை கருத்தில்கொண்டு இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்தக் காரணத்திற்காக இவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு உதவவும், சிறந்த நடைமுறைகள் மற்றும் நற்செய்தி விழுமியங்களுக்கு ஏற்ற முறையில் செயல்படவும், காரித்தாஸ் அமைப்பு தயாராக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து கருத்துத் தெரிவித்த அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் புதிய நிர்வாகி Pinelli அவர்கள், ஏற்கனவே சிறப்பாக உள்ளதை இன்னும் மேம்படுத்த இது அரியதொரு வாய்ப்பு எனவும், தன்னை நம்பி இந்தப் பொறுப்பை வழங்கிய திருத்தந்தைக்குத் தான் நன்றி கூறுவதாகவும், இவ்வமைப்பின் அனைத்துப் பணியாளர்களுடனும் இணைந்து பணியாற்றி ஒப்புரவின் வழியாக நற்கனிகளைக் கொணரத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்