மோதல்களைத் தவிர்ப்பதற்கான வழி அமைதி - பேராயர் காலகர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
போரை நிராகரிப்பது மோதல்களைத் தவிர்ப்பதற்கான வழியாகவும், எல்லா நிலைகளிலும் உரையாடல் மற்றும் நீடித்த நிலையான அமைதியை அடைவதற்கான வழியாகவும் இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார் பேராயர் காலகர்.
நவம்பர் 23 புதன் முதல் 25 வெள்ளி வரை உரோம் நகருக்கு அருகில் உள்ள Sacrofano என்னுமிடத்திலுள்ள Fraterna Domus என்ற ஆன்மீக இல்லத்தில் நடைபெற்று வரும் 98 வது துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டமைப்பில் பங்கேற்று பேசிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
புதிய தலைமுறையினரிடையே சமூக முன்னேற்றத்தை ஊக்குவிப்பதன் வழியாகப் போரைத் தடுக்க முடியும் என்று கூறிய பேராயர் காலகர், மோதல்களைத் தீர்ப்பதற்காகப் போரை நிராகரிப்பதும், எல்லா நிலையிலும் உரையாடல் நிகழ்த்துவதன் வழியாக நீடித்த நிலையான அமைதியை அடைய முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அனைவரும் உடன்பிறந்தோர்: அமைதியை உருவாக்குபவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம், என்ற மையப்பொருளில் நடைபெறும் இக்கூட்டமானது, திருத்தந்தையின் மனித உடன்பிறந்த உறவு என்னும் திருமடலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. உலகின் பல பகுதிகளில் தேவையில் இருக்கும் மக்கள் உள்ளனர் எனவும், காயங்களை ஆற்றுவதற்கான அமைதியின் பாதைகளை உருவாக்குபவர்களாக ஆண்கள் மற்றும் பெண்கள் துணிச்சலுடனும் படைப்பாற்றலுடனும் செயல்படவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.
உலகில் அமைதியை மேம்படுத்துவதற்கான திருஅவையின் அர்ப்பணம், குறிப்பாக துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் அமைதி, நீதி, படைப்பாற்றல், ஒருமைப்பாட்டிற்கான அர்ப்பணம், இருபால் பயிற்சித்திட்டங்கள் போன்றவற்றைப் பற்றியும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.
அமைதியை உறுதிப்படுத்துவது என்பது போர் மற்றும் மோதல்களை முழுமையாக நிராகரிப்பதைக் குறிக்கிறது என்று தனது தொடக்க உரையில், எடுத்துரைத்த பேராயர் காலகர், அமைதியை அடைவதற்கான ஒரே வழி உரையாடல் என்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுலின் வார்த்தைகளையும், உக்ரைனில் நடந்து வரும் போர் உட்பட தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலையை "மூன்றாம் உலகப் போர்" என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இடைவிடாத இன்றைய செய்தியையும் குறிப்பிட்டார். .
அமைதி என்பது மோதல்கள் இல்லாதது அல்ல
அமைதியை உறுதிப்படுத்துவது என்பது முதலில் போரை நிராகரிக்கவும், எல்லா நிலைகளிலும் உரையாடலைத் தேடவும், எதிர்காலத்தை நோக்கிய பாதைக்கு உத்தரவாதம் அளிக்கும் நம்பிக்கையின் சூழலை உருவாக்கவும் உதவுகிறது என்றும்,
மோதல்கள் இல்லாதது மட்டும் அமைதியல்ல, மாறாக மனச்சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாடுகள் மற்றும் மதங்களுக்கு இடையிலான மோதல்களை தீர்ப்பதுதான் முழுமையான அமைதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துறவு சபைத் தலைவர்களின் ஒன்றியப் பேரவையானது சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சந்த்திப்புடன் நிறைவடைய இருக்கின்றது.
1952 முதல், ஒரு அனைத்துலக மன்றமாக இருந்து வரும் இவ்வமைப்பு, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்தல், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல், "திருஅவையின் சேவையில் தனிப்பட்ட நிறுவனங்களின் வாழ்க்கை மற்றும் பணியை மேம்படுத்துதல் என்பதன் வழியாக தங்கள் சேவையில் ஒருவருக்கொருவர் துணையாக பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்