தேடுதல்

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் (கோப்புப்படம் 2017) வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் (கோப்புப்படம் 2017) 

டிசம்பர் 3ல் வத்திக்கானில் கிறிஸ்மஸ் குடில், மரம்

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் இவ்வாண்டில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலையும், கிறிஸ்மஸ் மரத்தையும், இத்தாலியின் Sutrio, மற்றும், Rosello நகராட்சிகள் நன்கொடையாக வழங்கியுள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான்

வருகிற டிசம்பர் 3ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடிலும், மின்விளக்குகளால் அழகுற ஒளிரும் கிறிஸ்மஸ் மரமும் பொது மக்களுக்குத் திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மூன்றாந்தேதி இத்தாலி நேரம் மாலை 5 மணிக்கு கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்திருக்கும் மின்விளக்குகள் எரியவிடப்படும் நிகழ்வோடு கிறிஸ்மஸ் குடிலும் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் நாட்டின் நிர்வாகத்துறையின் தலைவர் கர்தினால் Fernando Vérgez Alzaga அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் இந்நிகழ்வில், அத்துறையின் பொதுச் செயலர் அருள்சகோதரி Raffaella Petrini அவர்களும், இவையிரண்டையும் நன்கொடையாக வழங்கியுள்ள இத்தாலியின் Sutrio, மற்றும், Rosello  நகராட்சிகளின் பிரதிநிதிகளும், குவாத்தமாலாவின் பிரதிநிதிகளும் பங்கேற்பர்.

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், 2023ஆம் ஆண்டு சனவரி 8ம் தேதி வரை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

கிறிஸ்மஸ் குடில்

2022ஆம் ஆண்டின் கிறிஸ்மஸ் குடிலை, வட இத்தாலியின் Friuli-Venezia Giulia பகுதியிலுள்ள ஊதினே மாநிலத்தின் Sutrio என்ற கிராமம் வழங்கியுள்ளது என்று, வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் துறை அறிவித்துள்ளது. மரவேலைப்பாடுகளுக்குப் புகழ்பெற்ற Sutrio கிராமத்தினர் அமைத்த இக்குடில் முழுவதும் மரத்தால் ஆக்கப்பட்டுள்ளது.

இக்குடிலுள்ள திருவுருவங்கள் எல்லாம் கேதார் மரத்தாலானவை மற்றும், இவை சுற்றுச்சூழல் முழுமையாக மதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

குவாத்தமாலாவில் பரமரிக்கப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் மரங்கள்
குவாத்தமாலாவில் பரமரிக்கப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் மரங்கள்

கிறிஸ்மஸ் மரம்

மேலும், முப்பது மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், மத்திய இத்தாலியின் Abruzzo மாநிலத்தின் Rosello மலைக்கிராமத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் 182 பேர் மட்டுமே வாழ்கின்றனர்.

மத்திய காலத்தில் உருவான பழமையான Rosello கிராமம், மத்திய காலத்தில் வாழ்ந்த San Giovanni in Verde பெனடிக்ட் ஆழ்நிலை தியான துறவியரின் பிறப்பிடம் என்று பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இம்மலைக் கிராமத்தில், 54 மீட்டர் உயரமுள்ள Silver Fir மரம் உட்பட உயரமான White Fir மரங்கள் பல உள்ளன. 

இவ்வாண்டு இந்த கிறிஸ்மஸ் மரத்தை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வளிக்கும் 'La Quadrifoglio'  மையத்தின் இளையோர் அலங்கரிக்கின்றனர்.

மேலும், மற்றொரு கிறிஸ்மஸ் குடில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் வைக்கப்படும். இதனை குவாத்தமாலா நாடு அமைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2022, 14:39