தேடுதல்

ஹைதராபாத் மீன் சந்தை ஹைதராபாத் மீன் சந்தை 

மீனவர், நீர் மேலாண்மையினரின் பணிகள் அங்கீகரிக்கப்படவேண்டும்

உலகில் மீன்பிடித் தொழில் துறையில் பணியாற்றுவோரில் 85 விழுக்காட்டினர் ஆசியர்கள், 9 விழுக்காட்டினர் ஆப்ரிக்கர்கள் – FAO

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மீன் தொழில் துறை மற்றும், நீர் மேலாண்மை குறித்த பன்னாட்டு விதிமுறைகளும், ஒப்பந்தங்களும் நடைமுறைப்படுத்தப்பட அனைத்து அரசுகளும், மத அமைப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் இத்திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நவம்பர் 21, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக மீன்பிடித் தொழில் துறை நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீடத் துறையின் தலைவரான இயேசு சபை கர்தினால் செர்னி அவர்கள், மீன்பிடித் தொழில், மற்றும், நீர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆற்றுகின்ற பணிகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதற்கு இவ்வுலக நாள் நல்லதொரு வாய்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.   

உலகில் இலட்சக்கணக்கான மக்களுக்கு கடல்தாய் வழங்கும் உணவு வளங்களும், மீன்பிடி தொழில் மற்றும், நீர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் கடின வாழ்வும் சிலநேரங்களில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன எனபதை கர்தினால் செர்னி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

2016ஆம் ஆண்டில் மீன்பிடித் தொழில் குறித்த FAO நிறுவனத்தின் குழு (COFI),  மீன்பிடித் தொழில் துறை மற்றும், நீர் மேலாண்மை உலக ஆண்டு அறிவிக்கப்படுமாறு பரிந்துரைத்ததை முன்னிட்டு, 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.நா.வின் 72வது பொது அமர்வில் 2022ஆம் ஆண்டை, உலக மீன்பிடித் தொழில் துறைகள் மற்றும், நீர் மேலாண்மை உலக ஆண்டாக (IYAFA 2022) கடைப்பிடிக்கப்படுமாறு அறிவித்தது, அச்சூழலில் மீன்பிடித் தொழில் துறை உலக நாள் இத்திங்களன்று சிறப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார், கர்தினால் செர்னி.

FAO எனப்படும் ஐ.நா. வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனத்தின் கணிப்புப்படி 2020ஆம் ஆண்டில், 5 கோடியே 85 இலட்சம் பேர் மீன் தொழில் துறையில் ஈடுபட்டிருந்தனர் என்றும், இத்தொழிலில் அதிகமாக ஈடுபட்டுள்ளவர்கள் ஆசியர்கள் என்றும், அவர்களை அடுத்து ஆப்ரிக்கர்கள் என்றும் கர்தினாலின் செய்தி கூறுகிறது.

உலகின் மொத்த மீன்பிடித் தொழில் துறையில் பணியாற்றுவோரில் 85 விழுக்காட்டினர் ஆசியர்கள், 9 விழுக்காட்டினர் ஆப்ரிக்கர்கள், 4 விழுக்காட்டினர் அமெரிக்கர்கள், ஐரோப்பா மற்றும், ஓசியானியர்கள் ஒரு விழுக்காடு எனவும் கூறியுள்ள கர்தினால் செர்னி அவர்கள்,  உலகில் பல்வேறு சமூகங்களின் வாழ்வு, மற்றும், வளர்ச்சியில் இம்மீன்பிடித் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தாலும் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் மீன் தொழில் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கலான பிரச்சனைகளுக்கு புதிய வழிகளில் தீர்வுகள் காணப்பட, அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள், மதம் சார்ந்த அமைப்புகள், குறிப்பாக, ஸ்டெல்லா மாரிஸ், காரித்தாஸ் போன்ற கத்தோலிக்க நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து செயல்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார், கர்தினால் செர்னி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2022, 13:51