தேடுதல்

பாலஸ்தீன் நாட்டு ஐக்கிய நாடுகள் துயர்துடைப்புப் பணி நிறுவனம் பாலஸ்தீன் நாட்டு ஐக்கிய நாடுகள் துயர்துடைப்புப் பணி நிறுவனம்  

UNRWA அமைப்புக்கு நாடுகள் உதவிசெய்ய திருப்பீடம் அழைப்பு

போர் இடம்பெறாமல் இருப்பதால் மட்டுமல்ல, உரையாடல், ஒப்புரவு, மற்றும், வளர்ச்சியில் ஒருவர் ஒருவருக்கு உதவுதல் ஆகியவை வழியாக நீதியை நிலைநிறுத்துவதால் மட்டுமே உண்மையான அமைதி கிடைக்கும் - திருப்பீடம்

மேரி தெரேசா: வத்திக்கான்

அண்மை கிழக்கு நாடுகளில் வாழ்கின்ற பாலஸ்தீனப் புலம்பெயர்ந்தோருக்கு UNRWA எனப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப்பணி அமைப்பு ஆற்றிவரும் பணிகளுக்குத் திருப்பீடம் எப்போதும் ஆதரவளிக்கின்றது என்பதை மீண்டும் உறுதிசெய்ய விரும்புகிறேன் என்று, பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள், ஐ.நா. பொது அமர்வு ஒன்றில் கூறியுள்ளார்.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் காச்சா அவர்கள், நவம்பர் 07, இத்திங்களன்று ஐ.நா. பொது அவையின் 77வது அமர்வில் புலம்பெயர்ந்தோர் குறித்தும், ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணி குறித்தும் நடைபெற்ற உரையாடல்களில், இவை குறித்த திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.  

UNRWA அமைப்பு, பாலஸ்தீனப் புலம்பெயர்ந்தோரின் சிறாருக்கு கல்வி, அம்மக்களின் மாண்பும் உரிமையும் பாதுகாக்கப்படல் போன்றவற்றுக்கு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டிய அதேவேளை, அவ்வமைப்பு எதிர்கொள்ளும் நிதிப்பற்றாக்குறை  துயர்துடைப்புப் பணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது குறித்துக் கவலை தெரிவித்துள்ளார், பேராயர் காச்சா.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீன மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை குறித்தும் தன் உரையில் குறிப்பிட்டுள்ள பேராயர் காச்சா அவர்கள், நாடுகள் அவ்வமைப்புக்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பாலஸ்தீனம் மற்றும், இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்துவரும் வன்முறையால் உயரிழப்புகளும் ஏற்படுவது குறித்து குறிப்பிட்டுள்ள பேராயர் காச்சா அவர்கள், பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நிலைத்த மற்றும், முழுமையான தீர்வு காணப்படும் நடவடிக்கையில், யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று மதத்தவரும் எருசலேம் புனித நகரத்தில் தங்களின் சொந்த வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வதற்கு சமஉரிமை வழங்கப்படுவதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவ்வுலகில் அமைதி நிலவுவது, இக்காலக்கட்டத்தில் தொலைவில் இருப்பதாகத் தெரிகின்ற ஒரு சூழலில், போரைத் தவிர்த்து, ஒப்புரவின் விதைகளைப் பேணி வளர்ப்போம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்போடு தனது இவ்வுரையை நிறைவுசெய்வதாகத் தெரிவித்துள்ளார், பேராயர் கபிரியேலே காச்சா.

ஐ.நா.வின் அமைதிகாக்கும் படைகள்

மேலும், இத்திங்களன்று ஐ.நா. பொது அவையின் 77வது அமர்வில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படைகள் ஆற்றிவரும் நற்பணிகள் பற்றியும் உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், போர் இடம்பெறாமல் இருப்பதால் மட்டுமல்ல, உரையாடல், ஒப்புரவு, மற்றும், வளர்ச்சியில் ஒருவர் ஒருவருக்கு உதவுதல் ஆகியவை வழியாக நீதியை நிலைநிறுத்துவதால் மட்டுமே உண்மையான அமைதி கிட்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2022, 14:00