தேடுதல்

UNESCO UNESCO 

நீதிச்சமுதாயத்திற்கான பெண்கள் தலைமைத்துவம்

வத்திக்கான் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் சிறப்புரையுடன் இரண்டு நாள் கருத்தரங்கு பாரீஸில் தொடங்கப்பட இருக்கின்றது.

 

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனித நேயத்தின் முழுமுகம் - நீதிச்சமுதாயத்திற்கான பெண்கள் தலைமைத்துவம் என்னும் தலைப்பில் பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு,  மற்றும் யுனெஸ்கோவின் திருப்பீட நிரந்தரப் பணியகம் இணைந்து பாரீஸில் கருத்தரங்கு ஒன்றை நடத்த இருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 27 வியாழன், மற்றும் 28 வெள்ளி ஆகிய நாள்களில் பெண்களின் அனுபவம் மற்றும் திறன், தலைமைத்துவம் மற்றும் பங்கேற்றலில் பெண்கள் சந்திக்கும் சமூக நெறிமுறைகள், தடைகள், சவால்கள், போன்றவற்றை ஆராய்ந்து பார்த்து மதிப்பீடு செய்யவும், பெண்கள் தலைமைத்துவத்தை வலியுறுத்தவும், இரண்டு நாள் கருத்தரங்கு பாரீஸில் நடைபெற இருக்கின்றது.

மனித குலத்தின் முழுமையான முகத்தை வளப்படுத்துகின்ற, கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைப்பதை நோக்கமாக, இலக்காகக் கொண்டு பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கானது, நேரடி ஒலிபரப்பாக வத்திக்கான் செய்திகள் யூ டியூப் வலைதளத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானிய மொழிகளில் ஒலிபரப்பப்பட இருக்கின்றது.

கருத்தரங்கின் முதல் நாளில் பெண்களின் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தைப்  பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றியும், வறுமை மற்றும் வன்முறை தொடர்பான உறுதியான சூழ்நிலைகளில் கவனம் செலுத்துதல் பற்றியும்  கலந்துரையாடப்பட இருக்கின்றது.

இரண்டாம் நாளில் , நீதியான சமுதாயத்தில் பெண்களின் முழு ஈடுபாடு, பங்கேற்பதற்கான சிறந்த  வாய்ப்புக்கள், சூழ்நிலைகளை உருவாக்குதல்,போன்றவைகள் பற்றிக் கலந்துரையாடப்படும்.

பெண்கள் மற்றும் பெண் சிறார்க்கு எதிரான வன்முறை மற்றும் மோதல்கள், அமைதியைக் கட்டியெழுப்புதல், கல்வி, திறன், சமூகம் மற்றும் தலைமைத்துவத்தின் அடிப்படை என்பனவற்றில் மேம்பாடு அடைதல் போன்றவைகள் பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

வத்திக்கான் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் சிறப்புரையுடன் தொடங்கப்பட இருக்கும் இக்கருத்தரங்கில் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மேம்பாட்டுப் பேராயத்தின் செயலர்  அருள்சகோதரி அலெசாந்திரா ஸ்மரினெல்லி, பாகிஸ்தான் சிந்து மாநில உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முனைவர் Tabassum Yousaf  என பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2022, 12:43