தேடுதல்

கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின் 

கர்தினால் பரோலின்: உக்ரைனில் போர் நிறுத்தம் உடனடித் தேவை

மன்னிப்பின்றி நீதியே கிடையாது, அதேநேரம், செயலில் பிரதிபலிக்கின்ற மனமாற்றம், மன்னிப்பிற்கு அவசியம் - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைனில் இடைக்காலப் போர் நிறுத்தம் இயலக்கூடியது மட்டுமல்ல, அவசரத்தேவையுமாகும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், “Famiglia cristiana” அதாவது “கிறிஸ்தவக் குடும்பம்” என்ற இத்தாலிய வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“Famiglia cristiana” இதழில் அக்டோபர் 13, இவ்வியாழனன்று பிரசுரமாகியுள்ள இப்பேட்டியில், உக்ரைனில் இடைக்காலப் போர் நிறுத்தத்திற்கு, ஆயுதங்கள் கைவிடப்படவேண்டும் மற்றும், அவற்றின் சப்தங்கள் கேட்கப்படவே கூடாது என்பது முதலும் முக்கியமானதுமாகும் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் பரோலின்.

போரிடும் தரப்புகள், ஆயுதங்களைக் கைவிடுவதில் ஆர்வம் காட்டவில்லையெனில், நமக்கு வருங்காலம் கிடையாது என்று அப்பேட்டியில் கவலையோடு கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், பங்கேற்பு, உண்மையான உரையாடல், பகைமை, மற்றும் போர்களின் காயங்கள் உருவாக்கியுள்ள இறுக்கமான தன்மையைக் களையும் நம்பிக்கை போன்ற யுக்திகளை, இப்பூமிக்கோளத்தின் மீட்பு சார்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வன்முறை, உண்மையைக் கூறுவதைத் தவிர்க்கும் மனநிலை, பொருளாதார மற்றும், கருத்தியல் காலனித்துவப்போக்கு, பிரிவினையில் ஆர்வம், வலிமையுடையோரின் சட்டம் போன்றவை, போரைத் தொடங்குவதற்குரிய திட்டங்களைத் தூண்டிவிடும் காரணிகள் என்றுரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இவை மனித சமுதாயத்திற்குப் பேரிடரின் விளைவுகளைக் கொணரும் என்று சந்தேகமின்றிக் கூறலாம் என்று தெரிவித்துள்ளார்.

மன்னிப்பின்றி நீதி கிடையாது

உக்ரைனில் இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து கடுந்துயரை ஏற்படுத்தும் அப்போர் நிறுத்தப்படவேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதன் பின்புலத்தில் தன் கருத்தைப் பதிவுசெய்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், நீதி மற்றும், உரிமையின் மீது, அமைதி உருவாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். 

எனினும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியிருப்பதுபோன்று, மன்னிப்பின்றி நீதியே கிடையாது, அதேநேரம், செயலில் பிரதிபலிக்கின்ற மனமாற்றம், மன்னிப்பிற்கு அவசியம் என்று கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், எத்தகைய அமைதி இயலக்கூடியது எனக் கூறும் நிலையில் நான் இல்லை, ஆனால் ஆயுதங்கள், குண்டுவீச்சுக்கள், அழிக்கும் செயல்கள் ஆகியவற்றை நிறுத்துதல் அமைதிக்குத் தேவையான முதல் படி என உறுதிபடக் கூறலாம் என்றார்.

ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துதல்

இம்முதல் படி, அச்சுறுத்தும் அடையாளங்களால் அல்ல, மாறாக, உரையாடல் மற்றும், பேச்சுவார்த்தைக்குப் பாதையமைக்கின்ற திறந்தமனத்தை உருவாக்கும் நம்பிக்கை மற்றும், நன்மனத்தின் அடையாளங்களாக இருக்கவேண்டும் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதிக்கான விண்ணப்பம் கேட்கப்படும் என நம்புவோம் என்று கூறியுள்ளார்.   

உக்ரைனின் போர்ச்சூழல் மட்டுமல்ல, சிரியா, ஏமன், மற்றும், எத்தியோப்பியாவில் நிலவும் மக்களின் பெருந்துயரங்கள், தூர கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் பதட்டநிலை போன்றவை குறித்தும் திருத்தந்தை கவலையுடன் உள்ளார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் அப்பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2022, 14:55