திருப்பீடம்: புலம்பெயர்ந்தோர் தேவைகள் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருக்கு உதவ தன்னையே அர்ப்பணித்து ஆற்றிவரும் திருஅவையின் பணிகள் தொடரும் என்று, UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் 73வது அமர்வில் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் உறுதி கூறியுள்ளார்.
UNHCR நிறுவனத்தின் உயர் இயக்குனர் புலம்பெயர்ந்தோருக்கென வகுத்துள்ள திட்டம் குறித்து ஜெனீவாவில் நடைபெற்ற 73வது அமர்வில் அக்டோபர் 10, இத்திங்களன்று உரையாற்றிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின், பன்னாட்டு விவகாரப் பிரிவின் நேரடிப் பொதுச்செயலர் பிரான்செஸ்கா தி ஜொவான்னி அவர்கள், உலகில் பரவிவரும் போர்கள் குறித்த திருத்தந்தையின் கவலையை எடுத்துக் கூறினார்.
இரு கடுமையான உலகப் போர்களுக்குப்பின், மனித உரிமைகள் மற்றும்,, உலகளாவிய சட்டத்தை மதிக்கவும், பல்வேறு வகையான ஒத்துழைப்புகளை நோக்கியும் முன்னேறுவதற்கு இந்த உலகம் கற்றுக்கொண்டதுபோல் தெரிந்தது, ஆயினும், தற்போது இடம்பெறும் ஆயுதம் தாங்கிய மோதல்களைப் பார்க்கும்போது, பின்னடைவின் அடையாளங்களையே வரலாறு காட்டுகிறது என்று கூறியுள்ளார், தி ஜொவான்னி.
வன்முறை, அடக்குமுறைகள், மற்றும், போர்கள், நம் மனித சமுதாயத்தின் உடன்பிறந்த உணர்வு மற்றும், ஒன்றிப்பைச் சிதைத்துவரும் ஒரு காலக்கட்டத்தில் இந்த அமர்வு நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ள தி ஜொவான்னி அவர்கள், உலகினரின் கவனமெல்லாம் உக்ரைன் மீது திரும்பியிருக்கும் இந்நேரத்தில், நாம் எதிர்கொள்ளும் ஏனைய உலகளாவிய பிரச்சனைகளையும் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய ஒருமைப்பாடு
உக்ரைனில் இடம்பெறும் போரின் கடும்விளைவுகளை மிகுந்த அச்ச உணர்வோடு கவனித்துவரும் திருப்பீடம், இப்போரை முடிவுக்குக்கொணர இயலக்கூடிய அனைத்தையும் ஆற்றுமாறும், நிலைத்த அமைதியைக் கொணர உண்மையான உரையாடலில் தங்களையே அர்ப்பணிக்குமாறும் அனைத்து நாடுகளுக்கும் அழைப்புவிடுத்து வருவதையும் தி ஜொவான்னி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றம், மற்றும், இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தால் இடம்பெறும் கட்டாயப் புலம்பெயர்வுகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கவேண்டும், மற்றும், உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறியுள்ள தி ஜொவான்னி அவர்கள் இவற்றையும்விட மேலாக, இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் காணப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரோடு சேர்ந்து வருங்காலத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பது, அவர்களால் மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் உதவிகள் மதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற அர்த்தமாகும் என்ற திருத்தந்தையின் கருத்தையும், வலியுறுத்திக் குறிப்பிட்டார், தி ஜொவான்னி
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்