தேடுதல்

பெங்களூருவில் கிறிஸ்தவர்கள் பேரணி பெங்களூருவில் கிறிஸ்தவர்கள் பேரணி  (ANSA)

கிறிஸ்தவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட அழைப்பு.

யூத தொழுகைக்கூடங்கள், மசூதிகள், ஆலயங்கள், ஏனைய வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள் போன்றவற்றைக் குறிவைத்து தாக்கும் கொடுஞ்செயல்கள் அதிகரித்து வருவது திருப்பீடத்திற்கு அதிர்ச்சியளித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பிற மதத்தினர் உட்பட மதங்களுக்கு எதிராக இடம்பெறும் சகிப்பற்றதன்மை மற்றும், பாகுபாடுகள் நிறுத்தப்படுவதற்கு நாடுகளில் அதிக அர்ப்பணம் தேவைப்படுகின்றது என்று, பேரருள்திரு யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள், OCSE கூட்டத்தில் கூறியுள்ளார்.

OCSE எனப்படும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு நிறுவனம் வியன்னாவில் நடத்திய வார்சா மனிதப் பரிமாணம் பற்றிய கருத்தரங்கில் உரையாற்றிய, அந்நிறுவனத்தின் திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேரருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், 

சனநாயக நிறுவனங்கள் மற்றும், மனித உரிமைகளுக்கான OCSE அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மையப்படுத்திப் பேசியுள்ளார்.

யூதமத விரோதப்போக்கு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் ஏனைய மதத்தினருக்கு எதிரான ஒருதலைச்சார்பு எண்ணம் ஆகியவற்றால் தூண்டப்படும் சகிப்பற்றதன்மை மற்றும், பாகுபாட்டு நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார், பேரருள்திரு உர்பான்சிஸ்க். 

அண்மையில் இடம்பெற்றுள்ள வெறுப்பு சார்ந்த குற்றங்களில் 51 விழுக்காடு, மதத்திற்கு எதிரானவை என்று அவ்வறிக்கை வழியாகத் தெரிகிறது என்றும், கிறிஸ்தவர்க்கெதிரான காழ்ப்புணர்வு சூழல் அதிகரித்து வருகின்றது என்றும், பேரருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள் அக்கருத்தரங்கில் குறிப்பிட்டார்.

யூத தொழுகைக் கூடங்கள், மசூதிகள், ஆலயங்கள், ஏனைய வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள் போன்றவற்றைக் குறிவைத்து தாக்கும் செயல்கள், அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருவது குறித்து திருப்பீடம் கவலையடைந்துள்ளது என்றும், மதம் சார்ந்த குழுங்கள் மதிக்கப்படவேண்டும் மற்றும், அவர்களின் வருங்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பேரருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 14:13