பெண்களின் மாண்பு மதிக்கப்பட திருப்பீடம் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
பெண்களின் மாண்பு மதிக்கப்படாதபோது அனைத்து சமுதாயமும் புண்பட்டதாக இருக்கும் என்று, OCSE எனப்படும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு நிறுவனம், வார்சா மனிதப் பரிமாணம் என்பது பற்றி நடத்திவரும் கூட்டத்தில், அக்டோபர் 03, இத்திங்களன்று கூறியுள்ளார் பேரருள்திரு யானுஸ் உர்பான்சிஸ்க்.
பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைக் களைவதற்கு, சட்டம், மற்றும், நீதிமன்றம் சார்ந்த செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று, OCSE நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேரருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள் கூறியுள்ளார்.
ஆண்களும், பெண்களும், மாண்பையும் மதிப்பையும் இயல்பாகவே கொண்டவர்கள், மற்றும், அவர்கள் சம மாண்போடும், சம உரிமையோடும் பிறந்தவர்கள் என்றுரைத்துள்ள பேரருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், இவற்றோடு அவர்கள் கொண்டிருக்கும் சமமான, மற்றும், மாற்றமுடியாத உரிமைகள், உலகில் சுதந்திரம், நீதி மற்றும், அமைதிக்கு அடித்தளம் என்பதை நாம் மறக்காதிருப்போம் எனக் கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை
OCSE நிறுவனம், போலந்து நாட்டில் நடத்திவரும் ஐந்தாவது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் உரையாற்றிய பேரருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், இதில் கலந்துகொள்ளும் நாடுகள், பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைக் களைய பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும், உடல்ரீதியாகவோ, பாலினம் மற்றும் உளவியல் ரீதியாகவோ, அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், நம் சமுதாயங்களுக்கு ஓர் அவமானமாக உள்ளது என்றும், இந்நிலை புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் போன்று போர்கள் இடம்பெறும் சூழல்களில் இந்த வன்முறை உச்சத்தில் உள்ளது எனவும், சாதாரண வாழ்வுச் சூழல்களிலும் வன்முறைகள் இடம்பெறுகின்றன எனவும், கூறியுள்ளார் அவர்.
பணியிடங்களில் உரிமை மீறப்படல், பாலியல்ரீதியான நச்சரிப்பு, பாலுணர்வைத்தூண்டும் இலக்கியங்கள், விபசாரம், கட்டாய குடும்பக்கட்டுப்பாடு, கருக்கலைப்பு சாதனங்கள், பாலினத்தைத் தெரிந்துகொண்டு கருச்சிதைவுசெய்தல் போன்ற சில வன்முறைகளையும் குறிப்பிட்டுள்ளார், பேரருள்திரு உர்பான்சிஸ்க்.
பெண்களின் மாண்பு மதிக்கப்படல்
பெண்கள் மற்றும், சிறுமிகளின் இயல்பான மாண்பு மதிக்கப்படாமல் அல்லது, பாதுகாக்கப்படாமல் இருக்கும்போது, ஒவ்வொரு தனிமனிதரும், சமுதாயம் முழுவதும் புண்பட்டதாக இருக்கும் என்பதை உறுதியுடன் கூறியுள்ள பேரருள்திரு உர்பான்சிஸ்க் அவர்கள், பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் களைய, சட்டம், மற்றும் நீதித்துறை வழியாக செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்