அருளாளர் மற்றும், புனிதர்நிலை- பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ அருளாளர் மற்றும், புனிதர்நிலை- பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ 

போர்களின் தீமையிலும் கிறிஸ்தவ வீரப்பண்பைக் காணமுடிகின்றது.

அருளாளர் மற்றும், புனிதர்நிலைகளுக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம், “புனிதத்துவம் இன்று” என்ற தலைப்பில் உரோம் நகரில் கருத்தரங்கு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இக்காலத்தில் இடம்பெற்றுவரும் போர்களின் தீமையிலும் வீரத்துவமான கிறிஸ்தவ புண்ணியங்களைக் காணமுடிகின்றது என்று, அருளாளர் மற்றும், புனிதர்நிலைகளுக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள் கூறியுள்ளார்.

இப்புனிதர்நிலை பேராயம், அக்டோபர் 03, இத்திங்கள் மாலையில், உரோம் அகுஸ்தீனியானம் பாப்பிறை இறையியல் நிறுவனத்தில், “புனிதத்துவம் இன்று” என்ற தலைப்பில் தொடங்கியுள்ள நான்கு நாள் கருத்தரங்கு குறித்து கர்தினால் செமெராரோ அவர்கள் தலைமையிலான குழு செய்தியாளர் கூட்டத்தில் விவரித்துள்ளது.

இக்கருத்தரங்கில் கலந்துகொள்கின்ற இறையியலாளர்கள், சமூகத்தொடர்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், கடந்த காலத்தின் மாபெரும் கிறிஸ்தவப் புனிதர்கள் முதல், வருங்காலப் புனிதர்கள் வரை கலந்துரையாடல்களை நடத்தி, இக்காலத்தில் புனிதர்களாக வாழ்வதன் அர்த்தம் குறித்த தங்களின் சிந்தனைகளைப் பதிவுசெய்வார்கள் என்று அச்செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இக்காலத்தில் புகழ் என்றால் என்ன? புண்ணியங்களை வாழ்கையில் வீரத்துவமாக இருப்பது எப்படி? புனிதத்துவம் தசை சார்ந்ததா? போன்ற கேள்விகளை எழுப்பிய கர்தினால் செமெராரோ அவர்கள், புனிதத்துவம் என்பது கடவுளிடமிருந்து வருகின்ற ஓர் அழைப்பாகும் என்று விளக்கினார்.

புனிதர்கள் குறித்த வரலாற்றுக் காலத்திற்குப்பின் உலகமும் மாறியிருப்பதுபோன்று, மக்களும் தங்களின் வாழ்வில் கடவுளின் அழைப்பிற்கேற்ப வாழ்வதில் புனிதத்துவம் அடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள கர்தினால் செமெராரோ அவர்கள், இன்றைய டிஜிட்டல் உலகில் கிறிஸ்தவராய் வாழ்வதென்பது, அசிசி நகர் புனித பிரான்சிஸ் போன்று கடவுளின் அழைப்புக்குச் செவிமடுப்பதாகும் என்று கூறியுள்ளார்.

கதிரவனை சகோதரர் எனவும், நிலாவையும் நீரையும் சகோதரி எனவும் புனிதர் பாடல் பாடியதுபோன்ற நிலை இன்று இல்லை, இன்று நாம் சந்திக்கும் சுற்றுச்சூழல் மாசுகேடு பிரச்சனைகள் அன்று இல்லை என்றுரைத்த கர்தினால், புனிதத்துவம் குறித்து இன்று வித்தியாசமாய் விளக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

தண்ணீரையும், இயற்கையையும் பறவைகளையும் வெறுமனே அன்புகூர்ந்தால் மட்டும் இன்று போதாது, இவ்வாழ்வை வேறுவிதத்தில் வாழவேண்டியுள்ளது எனவும், இதற்காகவே இப்பேராயம் முன்மாதிரிகையான கிறிஸ்தவர்களின் வாழ்வு பற்றிய ஆய்வை மட்டுமன்றி, இக்காலத்தின் புனிதத்துவம் பற்றிய ஆய்வுகளையும் ஊக்கப்படுத்தி வருகின்றது எனவும், கர்தினால் செமெராரோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

 புனிதர்கள், மற்றும், 2022ஆம் ஆண்டில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் தூய ஆண்களும் பெண்களும்கூட, படுகொலைகள் நிரம்பியுள்ள இப்போர்க் காலத்தில் கிறிஸ்தவப் புண்ணியங்களைத் துணிச்சலுடன் அறிவித்துள்ளனர் என்றும் கர்தினால் கூறியுள்ளார்.

அக்டோபர் 3, இத்திங்களன்று தொடங்கியுள்ள இக்கருத்தரங்கு, 6, வருகிற வியாழனன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2022, 13:49