தேடுதல்

உக்ரைன் மக்களுடன் கர்தினால் செர்னி. உக்ரைன் மக்களுடன் கர்தினால் செர்னி.  

விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் கல்வி, இறையியலை வளப்படுத்துகிறது

கடவுள் நம்பிக்கையில் உறுதியாயிருக்கும் விளிம்புநிலையில் வாழ்வோரில் இறைவார்த்தையின் வல்லமையும், இறைவனின் அமைதியும் செயல்படுவதைக் காணமுடியும் - கர்தினால் செர்னி.

மேரி தெரேசா: வத்திக்கான்

இறையியல் கற்பவர்கள், வகுப்பறைகள் மற்றும், நூல்கள் வாசிப்பதிலிருந்து விலகி, விளிம்புநிலைகளில் வாழ்கின்ற மக்களிடம் செல்லும்போது, தங்களது நம்பிக்கையை வாழும்முறை, மற்றும், மறைப்பணியை ஆற்றும் முறைக்கு உதவும் என்று, கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், இறையியல் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கூறியுள்ளார்.

அக்டோபர் 12, இப்புதனன்று உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், "விளிம்புநிலை வாழ்வியிலிருந்து இறையியல் கற்றல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் செர்னி அவர்கள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் கல்வி, இறையியலை வளப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

இக்கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் செர்னி அவர்கள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் மற்றும், இறையியலை மையப்படுத்தி தன் கருத்துக்களை முன்வைத்தார்.

ஏழ்மை, அநீதி அல்லது பாகுபாடு போன்றவற்றால் சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்கின்ற மக்களில் ஆண்டவரைச் சந்திக்கமுடியும், அதேநேரம், நமது இறையியல் புரிந்துணர்வும், தொலைநோக்கும் வளமைடையும் என்று கூறியுள்ளார், கர்தினால் செர்னி.

விளிம்புநிலையில் வாழ்வோர், புறக்கணிக்கப்பட்டவர்கள் என உலக கண்ணோட்டத்தில் நோக்கப்பட்டாலும், கடவுள் நம்பிக்கையில் உறுதியாயிருக்கும் இம்மக்களில்  இறைவார்த்தையின் வல்லமையும், இறைவனின் அமைதியும் செயல்படுவதைக் காணமுடியும் என்றுரைத்த கர்தினால் செர்னி அவர்கள், வகுப்பறைகளைவிட்டு இம்மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்குச் செல்வது, வாழ்வியல் கல்வியாக இறையியல் மாற உதவும் என்று எடுத்தியம்பினார்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலகத்தின் அருள்சகோதரி Natalie Becquart, நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயத்தின் பேரருள்திரு Armando Matteo, இன்னும், காங்கோ மக்களாட்சி குடியரசு, இஸ்பெயின், சிலே, அமெரிக்க ஐக்கிய நாடு, பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2022, 15:02