கந்தல் தொழிலாளர் கந்தல் தொழிலாளர் 

கந்தல் தொழிலாளர்கள், “சமூக கவிஞர்கள்”

கந்தல் தொழிலாளர்களுக்கு மனிதக் குடும்பம் அனைத்தும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. திருஅவை அவர்களோடு உடன்பயணிக்கிறது - கர்தினால் செர்னி

மேரி தெரேசா: வத்திக்கான்

குப்பைத்தொட்டிகளில் போடப்படும் மறுபயனுக்குரிய மற்றும், மறுசுழற்சிக்குரிய பொருள்களைப் பொறுக்கி எடுத்துப் பயன்படுத்துகின்ற, கந்தல் தொழிலாளர்களுக்கு மனிதக் குடும்பம் அனைத்தும் நன்றி தெரிவிக்கவேண்டும், அதேநேரம், திருஅவை அவர்களோடு உடன்பயணிக்கிறது மற்றும், அவர்களை ஊக்கப்படுத்துகிறது என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 29, இச்சனிக்கிழமையன்று இணையதளம் வழியாக நடைபெற்ற கந்தல் தொழிலாளர்களின் உலகளாவிய கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் பங்குபெற்றவர்களை  வாழ்த்திப் பேசிய கர்தினால் செர்னி அவர்கள், நாம் அனைவரும் பொதுவாகக் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய விழுமியம், மனித மாண்பு என்பதால், அதனைச் செயலில் வெளிப்படுத்துங்கள் என்று அத்தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், ஒவ்வொருவரும் தனக்கும், மற்ற அனைவருக்குமென விரும்பும் இலக்கு ஆகும், ஆயினும், தங்களின் மாண்பு மதிக்கப்படுவது மறுக்கப்படுவதால், பலர் தங்களின் முன்னேற்றத்திலும் ஏமாற்றமடைகின்றனர் என்றுரைத்த கர்தினால் செர்னி அவர்கள், நம் பொருளாதாரம், மற்றும், நிர்வாகத்தில் மாற்றம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மாற்றத்தைக் கொணர்பவர்கள்
மாற்றத்தைக் கொணர்பவர்கள்

மாற்றத்தைக் கொணர்பவர்கள்

கந்தல் தொழிலாளர்களாகிய நீங்கள், மாற்றத்தைக் கொணர்பவர்கள் என்றுரைத்துள்ள கர்தினால் செர்னி அவர்கள், பயனின்மை மற்றும், புறக்கணிப்பு மட்டுமே காணப்படும் இடங்களில் நீங்கள் நம்பிக்கையை உருவாக்குவதால், உங்களை, “சமூகக் கவிஞர்கள்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைக்கிறார் என்று கூறியுள்ளார்.

உண்மையில் இத்தகைய புறக்கணிப்பு நிலைகளில் திருஅவை பிறந்தது மற்றும், அது தொடர்ந்து புதுப்பிக்கப்படவேண்டியுள்ளது எனவும், நம் சனநாயகத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் மற்றும், பொருளாதாரத்தை மீள்பார்வையிட வைக்கும் திறனை அத்தொழிலாளர்கள் கொண்டிருக்கின்றனர் எனவும் உரைத்த கர்தினால் செர்னி அவர்கள், சமுதாயங்களின் விளிம்புநிலைகளில் உள்ளவர்களைக் கடுமையாய்ப் பாதிக்கும்  பிரச்சனைகளுக்கு வியத்தகு முறையில் இவர்கள் தீர்வை வழங்குகின்றனர் என்று எடுத்தியம்பியுள்ளார்.

எனவே இப்புதிய கூட்டமைப்போடு, இத்தொழிலாளர்கள் அவர்களது சமூகக் கவிதையை விரிவுபடுத்துகின்றனர் மற்றும், ஒருங்கிணைக்கின்றனர் என்று வாழ்த்திய இயேசு சபை கர்தினால் செர்னி அவர்கள், அனைத்து மனிதக் குடும்பமும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மறுசுழற்சிக்குரிய பொருள்களைப் பொறுக்கி எடுத்து விற்பவர்கள்
மறுசுழற்சிக்குரிய பொருள்களைப் பொறுக்கி எடுத்து விற்பவர்கள்

கந்தல் தொழிலாளர்கள்

கந்தல் தொழிலாளர்கள் என்பவர்கள், குப்பைகளில் போடப்படும் மறுபயனுக்குரிய மற்றும், மறுசுழற்சிக்குரியப் பொருள்களைப் பொறுக்கி எடுத்து, அவற்றை விற்பவர்கள் அல்லது தங்களது பயனுக்கென்று வைத்துக்கொள்பவர்கள் ஆவார்கள்.

தங்களின் பணிகளும் உரிமைகளும் அங்கீகரிக்கப்படவேண்டும் என, பல ஆண்டுகளாக உலக அளவில் இடம்பெற்ற போராட்டங்களின் பயனாக, 34 நாடுகளைச் சேர்ந்த 36 கந்தல் பணியாளர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து முதல் உலக கந்தல் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளன. அதன் தொடக்க நிகழ்வு இச்சனிக்கிழமையன்று நடைபெற்றது.

உலகில் கந்தல் தொழிலாளர்களாக ஏறத்தாழ 2 கோடிப் பேர் உள்ளனர். இக்கூட்டமைப்பில், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் உட்பட ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்காவைச் சேர்ந்த 36 அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2022, 13:04