தேடுதல்

விண்வெளி விண்வெளி 

விண்வெளி, எதிர்கால தலைமுறையினருக்காகப் பாதுகாக்கப்படவேண்டும்

விண்வெளியானது நிரந்தரமாக இராணுவமயமாக்கப்படாமல் இருப்பதும், அமைதியான நோக்கங்களுக்காகப் பாதுகாக்கப்படுவதும் அவசியம் : பேராயர் Gabriele Caccia.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

விண்வெளி நமது பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தின் ஒரு பகுதியாகும், மேலும், ஒவ்வொரு நாடும் தற்போதைய மற்றும், எதிர்காலத் தலைமுறையினருக்குப் பொறுப்புடன் அதைப் பாதுகாப்பதில் கடமை உள்ளது என்று, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Gabriele Caccia அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 26, இப்புதனன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நடைபெற்ற 77-வது பொது அமர்வின் முதல் குழுவில் விண்வெளிப் பற்றிய கருத்தரங்கில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார், பேராயர் Caccia.

இன்றுவரை, ஆயுதங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும், அவற்றை நிலைநிறுத்துவதில் இருந்து விண்வெளி விடுபட்டுள்ளது என்று கூறியுள்ள பேராயர் Gabriele Caccia அவர்கள், திருப்பீடத்தைப் பொறுத்தவரை, விண்வெளியானது நிரந்தரமாக இராணுவமயமாக்கப்படாமல் இருப்பதும், அமைதியான நோக்கங்களுக்காகப் பாதுகாக்கப்படுவதும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துவிதமான சவால்களும் நன்கு அறியப்பட்ட நிலையில், 1985ஆம் ஆண்டு முதல் அனைத்துலக சமூகம் விண்வெளியில் எல்லா வகையான ஆயுதங்களையும் தடை செய்வதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இன்னும் வெற்றிபெறவில்லை என்றும் தனது உரையில் கவலை தெரிவித்துள்ளார் பேராயர் Caccia

மேலும் இத்தகைய தடை முன்னெப்போதையும்விட அவசரமானது என்பதை எடுத்துக்காட்டியுள்ள பேராயர் Caccia அவர்கள், சுற்றுப்பாதை மற்றும் விண்வெளி அடிப்படையிலான ஆயுதங்களின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பரிசோதனை ஆகியவற்றில் பல்வேறு நாடுகள் தங்களின் வளங்களைச் செலவழித்துள்ளன என்று திருப்பீடம் எச்சரிக்கையுடன் குறிப்பிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயல்பாடுகள் விண்வெளியில் ஆயுதப் போட்டிக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியில் வளர்ந்துவரும் பயன்பாட்டையும் தடுக்கின்றன என்றும் விளக்கியுள்ளார், பேராயர் Caccia.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2022, 14:24