தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் உடன் திருப்பீட அதிகாரி பேராயர் Gabriele Caccia. திருத்தந்தை பிரான்சிஸ் உடன் திருப்பீட அதிகாரி பேராயர் Gabriele Caccia.  

இலகுவகை ஆயுதங்களைத் தடை செய்வதில் திருப்பீடத்தின் உறுதி

தீவிரவாதிகளின் கைகளில் சட்ட விரோத ஆயுதங்கள் செல்லும்போது, மனித கடத்தல்கள், போதைப்பொருள் வியாபாரம், போன்றவை அதிகரிக்கும் ஆபத்து.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கையில் எடுத்துச்செல்லவல்ல, அதேவேளை பேராபத்தை விளைவிக்கக்கூடிய இலகுவகை ஆயுதங்களைத் தடைசெய்தல், எதிர்த்துப் போராடல், மற்றும் அழித்தல் குறித்த நடவடிக்கைகளில் திருப்பீடத்தின் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளார் திருப்பீட அதிகாரி, பேராயர் Gabriele Caccia.

 பேரழிவைத்தரும் இலகுவகை ஆயுதங்கள் சட்டவிரோதமாக வியாபாரம் செய்யப்படுவதை ஒழிப்பதில் அனைத்துலக நாடுகளின் ஒன்றிணைந்த முயற்சியை வலியுறுத்தி அக்டோபர் 24, திங்கள்கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் நகரின் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Caccia அவர்கள், இவ்வாயுதங்கள் சிறியவையாக இருக்கின்றபோதிலும், இவற்றால் ஒவ்வோர் ஆண்டும் நூறாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

ஆயுதங்களின் சட்டவிரோத வியாபாரம், மற்றும் வன்முறைகளுக்கு இடையேயுள்ள தொடர்பு குறித்தும் எடுத்துரைத்த, ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் Caccia அவர்கள், தீவிரவாதிகளின் கைகளில் இந்த சட்ட விரோத ஆயுதங்கள் செல்லும்போது அவைகளின் துணையுடன் குற்றங்கள், மனித கடத்தல்கள், போதைப்பொருள் வியாபாரம், காட்டு விலங்குகள் வியாபாரம் போன்றவை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அமைதியின்றி வளர்ச்சியில்லை, வளர்ச்சியின்றி அமைதியில்லை என 1967ஆம் ஆண்டிலேயே புனித திருத்தந்தை ஆறாம் பவுல் கூறிய வார்த்தைகளையும், பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் மனித வாழ்வுக்கே எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் அந்த ஐ.நா. கூட்டத்தில் கோடிட்டுக் காட்டினார் பேராயர் Caccia.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2022, 14:04