தேடுதல்

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள்  

60 ஆண்டுகளாக தொடரும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க பயணம்

நன்மைத்தனமும், பொறுமையும், இரக்கமும் உடைய ஓர் அன்புமிகு அன்னையாக, மக்களுடன் இணைந்து நடக்கும் திருஅவை. – திருத்தந்தை 23ம் யோவான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நன்மைத்தனமும், பொறுமையும், இரக்கமும் உடைய ஓர் அன்புமிகு அன்னையாக, கனிவும் நெருக்கமும் கொண்டவராக, மக்களுடன் இணைந்து நடக்கும் திருஅவை தன் ஆண்டவரின் பின்னால் தாழ்மையுடன் எழுந்து நிற்கிறது என, 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் கூறியது இன்றும் தொடர்கிறது என கூறியுள்ளார் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் Andrea Tornielli.

1962ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவையொட்டி செய்தியொன்றை வெளியிட்டுள்ள வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் தொர்னியெல்லி அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க துவக்க விழாவில் முதிய திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் 2449 ஆயர்களின் முன்னிலையில் வழங்கிய 37 நிமிட துவக்க உரையில் வெளிப்படுத்திய ஆவல், தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதை காணமுடிகின்றது என தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் கொண்டிருந்த கனவுகளையும் தூண்டுதலையும் துணையாகக் கொண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் சங்கம், அதற்கு அடுத்து வந்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் நிறைவுக்கு கொணரப்பட்டது மட்டுமல்ல,  அனைத்து பரிந்துரை ஏடுகளும் ஒருமனதாக நிறைவேற்றப்படும் அதிசயமும் நிகழ்ந்தது என்று தன் செய்தியில் கூறியுள்ளார் தொர்னியெல்லி.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை அடுத்துவந்த 10 ஆண்டுகளில் அது தொடர்பாக எழுந்த முரண்பாடுகளையும் குழப்பங்களையும் சமாளித்து திருஅவை எனும் படகை கடலலைகளின் சீற்றங்களில் இருந்து காப்பாற்றியதில் திருத்தந்தை 6ம் பவுல் அவரகள் மிக முக்கியப்பங்காற்றினார் எனவும் கூறியுள்ளார் தொர்னியெல்லி தன் செய்தியில்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் பயணம் 60 ஆண்டுகளாகியும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பொதுச்சங்க தந்தையராகவோ, இறையியலாளராகவோ நேரடியாக தொடர்புக் கொண்டிராத நம் திருத்தந்தை பிரான்சீஸ் அவர்கள், அதன் பாதையிலேயே உறுதியுடன் நடைபோடுகிறார் என தன் செய்தியில் உரைக்கும் தொர்னியெல்லி அவர்கள், அன்பு நிறைந்த அன்னை என்ற திருஅவையின் முகத்தை உலகிற்கு தன் செயல்கள் வழியாக வெளிப்படுத்த திருத்தந்தை முயற்சித்து வருகிறார் என மேலும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2022, 14:05