தேடுதல்

கர்தினால் மார்செல்லோ செமெராரோ கர்தினால் மார்செல்லோ செமெராரோ 

அக்டோபர் 3-6,2022, “புனிதத்துவம் இன்று” கருத்தரங்கு

பிறர்நலம் பேணுதல், நல்லிணக்கம், தோழமை, உடன்பிறந்த உணர்வு, உலகில் நல்லன ஆற்றுதல் ஆகியவற்றைக் கொணர்கின்ற ஒரு கலாச்சார, சமூக மற்றும், தனிமனித மாற்றத்தை இயலக்கூடியதாக ஆக்குகின்றது, புனிதர்களின் புனித வரலாறு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

“புனிதத்துவம் இன்று” என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை உரோம் நகரில் நடைபெறவிருக்கின்ற கருத்தரங்கு குறித்து, செப்டம்பர் 19, இத்திங்களன்று அருளாளர், மற்றும், புனிதர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது,

அப்பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ, அப்பேராயத்தின் செயலர் பேராயர் Fabio Fabene, Roma Tre பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் Cecilia Costa ஆகிய மூவரும் இக்கருத்தரங்கு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.  

பேராயர் Fabio Fabene அவர்கள், இக்கருத்தரங்கு நடைபெறும்விதம் குறித்து விளக்கியவேளை, கர்தினால் செமெராரோ அவர்கள், புனிதத்துவத்திற்கான புகழ், கிறிஸ்தவ வீரத்துவப் புண்ணியப் பண்புகள் ஆகிய இரு அம்சங்கள் குறித்து இக்கருத்தரங்கு கவனம் செலுத்தவிருக்கின்றது என்றுரைத்து, அவை குறித்து விளக்கினார்.  

ஒருவரை இறை ஊழியராக அறிவிப்பதற்கென, மறைமாவட்ட அளவில் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குமுன் இரு காரியங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் எனத் தெரிவித்த கர்தினால் செமெராரோ அவர்கள், அந்த நபரின் புனிதத்துவ வாழ்வு குறித்து கத்தோலிக்கர் மத்தியில் உறுதியான நம்பிக்கை இருக்கவேண்டும், மற்றும், அந்த நபரின் பரிந்துரையால் மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறியிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைவருமே புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விழிப்புணர்வு கத்தோலிக்கரிடையே இருக்கவேண்டியது முக்கியம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ள கர்தினால் செமெராரோ அவர்கள், புனித ஜான் கென்றி நியுமேன் அவர்களின் புனித வாழ்வைக் குறிப்பிட்டு, இறை ஊழியராக அறிவிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்படுபவரின் தூய வாழ்வு மற்றவருக்கு முன்மாதிரிகையாய் அமைந்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

வீரத்துவப் புண்ணியப் பண்புகள்

கிறிஸ்தவ வீரத்துவப் புண்ணியப் பண்புகள் பற்றி விளக்கிய கர்தினால் செமெராரோ அவர்கள், தொடக்கமுதல் நூற்றாண்டுகளாக மறைசாட்சிகள், மறைவல்லுநர்கள் போன்றோரை, கிறிஸ்தவ நம்பிக்கையை உண்மையாகவே துணிச்சலோடு எடுத்துரைத்தவர்கள் என்று திருஅவை போற்றி வருகின்றது என்றும், இன்றைய கலாச்சாரச் சூழலில் கிறிஸ்தவ வீரத்துவப் புண்ணியப் பண்புகள் மிகவும் சிறப்பான கூறைக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.  

எனவே, “புனிதத்துவம் இன்று” என்ற தலைப்பு, அருளாளர், மற்றும், புனிதர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்திற்கு மட்டுமன்றி, இறைமக்களுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் என கர்தினால் செமெராரோ அவர்கள் கூறியுள்ளார்.

பேராசிரியர் செசீலியா கோஸ்தா அவர்கள் பேசுகையில், புனிதர்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதோடு, அவர்கள், வரலாற்றை அமைக்கின்றனர் என்றும், பிறர்நலம் பேணுதல், நல்லிணக்கம், தோழமை, உடன்பிறந்த உணர்வு, உலகில் நல்லவை ஆற்றுதல் ஆகியவற்றைக் கொணர்கின்ற ஒரு கலாச்சார, சமூக மற்றும், தனிமனித மாற்றத்தை, அவர்களின் புனித வரலாறு இயலக்கூடியதாக ஆக்குகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2022, 14:42