திருத்தந்தையர்கள் முதலாம் அருள் சின்னப்பர் மற்றும் இரண்டாம் அருள் சின்னப்பர் திருத்தந்தையர்கள் முதலாம் அருள் சின்னப்பர் மற்றும் இரண்டாம் அருள் சின்னப்பர்  

திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் எளிமையாக வாழ்ந்தவர்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இறை ஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் பற்றி வழங்கியுள்ள சாட்சியம் முக்கியத்துவம் பெற்றது.

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 04, வருகிற ஞாயிறு இத்தாலி நேரம் காலை 10.30 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், இறை ஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படுவார்.

இறை ஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு வேண்டுகையாளராகத் திருப்பணிகளை மேற்கொண்ட கர்தினால் பெனியமினோ ஸ்டெல்லா அவர்கள் (Beniamino Stella) தலைமையிலான குழு ஒன்று, செப்டம்பர் 02, இவ்வெள்ளியன்று இந்நிகழ்வு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது.

Albino Luciani என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், செபிக்கும் அருள்பணியாளர், எளிமையாக வாழ்ந்தவர், மக்களோடு நல்லுறவு கொண்டிருந்தவர் என அத்திருத்தந்தையின் மூன்று பண்புகளைச் சுட்டிக்காட்டினார், கர்தினால் ஸ்டெல்லா.

ஓர் அருள்பணியாளருக்கு வங்கிக் கணக்கோ, காசோலையோ இருக்கக் கூடாது என, எனது அன்னை அடிக்கடி சொல்வார் என, அத்திருத்தந்தை குருத்துவப் பயிற்சிக் கல்லூரிகள் போன்ற இடங்களுக்குச் சென்றபோதெல்லாம் கூறியுள்ளார் என்றும் கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அருள்பணியாளராக, ஆயராக, மற்றும், திருத்தந்தையாக, இத்திருத்தந்தை தன் வாழ்வு முழுவதும் கடவுளின் கனிவு மற்றும், தாய்மைப் பண்பை வெளிப்படுத்தினார், இத்திருத்தந்தையின் புனிதத்துவம், இன்றையத் திருஅவைக்கும், உலகிற்கும் மிக முக்கியமானது என்பதை கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் வலியுறுத்திப் பேசினார்.

கடவுள் திருமுன் தான் பாவி என்பதையும், அவரின் இரக்கம் தனக்குத் தேவை என்பதையும் ஏற்கும் மனத்தாழ்மை, நற்செய்தியின் மகிழ்வை அறிவித்து பிறரன்புப் பணிகள் ஆற்ற தாராளத்துடன் அர்ப்பணித்தல் போன்ற வாழ்வுக்கு இத்திருத்தந்தை முன்மாதிரிகையாய் இருக்கிறார் என்றும் கர்தினால் எடுத்துரைத்தார்.

திருப்பணிகளின் ஆரம்பம்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, அருளாளர், மற்றும் புனிதர்நிலைக்கு உயர்த்தும் திருப்பணிகள் தொடங்கப்பட்டது குறித்தும் விளக்கிய கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், இத்திருத்தந்தை இறைபதம் சேர்ந்து 44 ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, இவர் இறந்தவுடனேயே, கத்தோலிக்கர் மட்டுமல்ல, உலகினர் அனைவரின் மனங்களையும் ஈர்த்தவர் என்று கூறியுள்ளார்.

இத்திருத்தந்தை இறந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரின் புனிதத்துவ வாழ்வால் கவரப்பட்ட பல கத்தோலிக்கர் அவரிடம் செபிக்கத் தொடங்கினர், அவரைப் புனிதராக அறிவிப்பதற்குத் தேவையான திருப்பணிகளைத் தொடங்குமாறு அவர் பிறந்த இத்தாலியின் Belluno-Feltre மறைமாவட்ட ஆயருக்கு விண்ணப்பங்கள் வரத்தொடங்கின என்று எடுத்துரைத்தார், கர்தினால் ஸ்டெல்லா.

குறிப்பாக, இத்திருப்பணிகள் தொடங்கப்படவேண்டும் என, 1990ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் 226 ஆயர்கள் இணைந்து, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களுக்கு விண்ணப்ப மடல் ஒன்றை அனுப்பியிருந்தனர் என்றுரைத்த கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், பிரேசில் ஆயர்கள் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விண்ணப்பங்கள் வரத்தொடங்கின, அந்த அளவுக்கு அத்திருத்தந்தையின் புனிதத்துவ வாழ்வு மக்களைக் கவர்ந்துள்ளது என்று எடுத்தியம்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2022, 16:17