தேடுதல்

கானடா திருத்தூதுப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு கானடா திருத்தூதுப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு 

பல்சமய உரையாடல், அமைதியை ஊக்குவிக்க திருத்தூதுப் பயணம்

கஜகஸ்தான் திருத்தூதுப் பயணத்தில், அந்நாட்டில் சிறுபான்மையாக, அதேநேரம் நம்பிக்கையில் உறுதியோடு இருக்கின்ற கத்தோலிக்க சமுதாயத்தோடு தனக்கிருக்கும் நெருக்கத்தை தெரிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கஜகஸ்தான் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், மதங்களின் தலைவர்களின் உதவியோடு உலகில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சியாக உள்ளது என, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 13, வருகிற செவ்வாய் முதல், 15, வியாழன் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 38வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, கஜகஸ்தானுக்குச் செல்வது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய புரூனி அவர்கள், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், பல்சமய உரையாடல் மற்றும், அமைதியை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை, கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் உலக மற்றும், பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் ஏழாவது மாநாட்டில் பங்குகொள்வார்  என்றும், அந்நாட்டில் சிறுபான்மையாக, அதேநேரம் நம்பிக்கையில் உறுதியோடு இருக்கின்ற கத்தோலிக்க சமுதாயத்தோடு தனக்கிருக்கும் நெருக்கத்தை தெரிவிப்பார் என்றும், புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

இதுவரை 56 நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய ஆசியாவிலுள்ள கஜகஸ்தானுக்கு செல்வது 57வது நாடாக அமையும்  என்று கூறியுள்ள புரூனி அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான சிறிது நாள்களிலே திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கஜகஸ்தானுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் என்று எடுத்துரைத்துள்ளார்.

அத்திருத்தூதுப் பயணத்தில் கஜகஸ்தான் நாட்டிற்குள்ளே வாழ்கின்ற கஜக், இரஷ்ய, உக்ரைன், மற்றும் ஏனைய இனத்தவருக்கு இடையேயும், மதங்களுக்கிடையேயும் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் அழைப்புவிடுத்தார், அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அந்நாட்டிற்குச் செல்கிறார் என்றும் புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

கஜகஸ்தானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு எழுபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு பத்திரிகையாளர்களும் செல்வார்கள் எனவும், அந்நாட்டிற்குச் செல்லும் விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களை வாழ்த்தும் திருத்தந்தை, அங்கிருந்து திரும்பும் பயணத்தில் வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என்று புரூனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கஜகஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும் அந்நாட்டிலுள்ள 26 விழுக்காட்டு கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினோர் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையினர் ஆவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 செப்டம்பர் 2022, 15:27