2025ஆம் யூபிலி ஆண்டு பாடல் போட்டி
மேரி தெரேசா: வத்திக்கான்
கத்தோலிக்கத் திருஅவையில் 2025ஆம் ஆண்டில் சிறப்பிக்கப்படும் யூபிலி ஆண்டின் கருப்பொருளை வெளிப்படுத்தும் பாடல் போட்டி ஒன்றை, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, செப்டம்பர் 17, இச்சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
திருப்பீடத்தின் 2025ஆம் புனித யூபிலி ஆண்டுத் தயாரிப்புக்களுக்குப் பொறுப்பான அத்திருப்பீட அவை, இப்போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், தாங்கள் எழுதும் பாடல் வரிகளுக்கு ஏற்ப, பண்ணையும் சேர்த்து அனுப்புமாறு அறிவித்துள்ளது.
இந்த யூபிலி ஆண்டு பாடல், திருவழிபாட்டு நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும், மற்றும், அப்பாடல், திருஅவையின் மக்கள் கூட்டம், ஆலயப் பாடகர் குழு ஆகியோரால் பாடக்கூடியதாக அமைந்திருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரையறைகள்
இப்போட்டியில் கலந்துகொள்வோர் குறித்த சில வரையறைகளையும் அத்திருப்பீட அவை பதிவுசெய்துள்ளது.
யூபிலி பாடல், அதை எழுதுவோருடையதாக இருக்கவேண்டும், அப்பாடல் அதுவரை வெளியிடப்படாததாகவும், பாடலின் பல்லவி, மற்றும், சரணம், பாடகர் குழுவால் நான்கு குரல்களில் பாடக்கூடியதாகவும் இருக்கவேண்டும்
இப்போட்டியில் கலந்துகொள்வோரின் பா, பண் வேலைக்கு ஏற்கனவே பணம் பெற்றதாகவும், இப்பாடலும், பண்ணும், ஏதாவது ஓர் இசை நிகழ்ச்சியில் அல்லது, பொது நிகழ்வில் இடம்பெற்றதாகவும், எந்த ஓர் ஊடகத்திலும் ஒலிபரப்பப்பட்டதாகவும் இருக்கக்கூடாது.
மேலும் சில வரையறைகள், 2025ஆம் யூபிலி ஆண்டு பாடல் போட்டிக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையபக்கத்தில் உள்ளன.
இதில் கலந்துகொள்வதற்குரிய விண்ணப்பப் படிவங்களை, www.iubilaeum2025.va/en/inno.html என்ற முகவரியில், 2023ஆம் ஆண்டு சனவரி மாதம் 16ம் தேதியிலிருந்து அவ்வாண்டு மார்ச் மாதம் 25ம் தேதி, இத்தாலிய நேரம் இரவு 8 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2025ஆம் யூபிலி ஆண்டுக்கு, “நம்பிக்கையின் திருப்பயணிகள்” என்ற தலைப்பைத் தெரிவுசெய்துள்ளார்.
பொதுவாக கத்தோலிக்கத் திருஅவையில் 25 ஆண்டுக்கு ஒரு முறை யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்படுகிறது. சில சிறப்பு நிகழ்வுகளை முன்னிட்டு, சிறப்பு யூபிலி ஆண்டுகளும் கொண்டாடப்படுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்