திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின். திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின். 

உக்ரைனில் போரை பரவலாக்குவது தவிர்க்கப்படவேண்டும்

மக்களின் குரல்களுக்குச் செவிமடுத்து அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதும், பொது நலனுக்காக உழைப்பதும் நல்லதோர் அரசியலின் பண்பாகும் - கர்தினால் பரோலின்.

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைனில் ஆறு மாதங்களுக்குமேல் இடம்பெற்றுவரும் போர் மேலும் பரவலாக்கப்படுவது, குறிப்பாக, அணு குண்டுகள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

அமைதி குறித்த இறை ஊழியர் முதலாம் யோவான் பவுல் அவர்களின் அதிகாரப்பூர்வ போதனை, உக்ரைனில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர், அணுப் பேரழிவு அச்சுறுத்தல் போன்றவை குறித்து, இத்தாலிய தொலைக்காட்சியின் Tg1 அலைவரிசை செய்தியாளர் Ignazio Ingrao என்பவருக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

அமைதிக்காக குரல்கொடுப்பவர்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அமைதிக்காகத் தொடர்ந்து அழைப்புவிடுத்தவர், அவரது அமைதி குறித்த செய்தி, போரினால் துயருறும் இன்றைய உலகுக்குத் தேவைப்படுகின்றது என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்திருத்தந்தை வெளியிட்ட ஊர்பி எத் ஓர்பி செய்தியில், துன்புற்றுள்ள உலகில் அமைதியைப் பாதுகாக்கவும், அதைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் தகுதியான முன்னெடுப்புகள் அனைத்திற்கும் ஆதரவளிக்கிறேன் என்று கூறியுள்ளதை கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.    

குறிப்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே அமைதியை உருவாக்க Camp Davidவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மனதில் வைத்து, இவ்வாறு கூறிய இத்திருத்தந்தை, 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி மூவேளை செப உரையின்போதும் Camp David குறித்து குறிப்பிட்டு, அமைதிக்காக முயற்சிகளை எடுக்கும் தலைவர்களை ஆண்டவரிடம் அர்ப்பணிக்கின்றேன் என்று கூறினார் எனவும் தெரிவித்தார், கர்தினால் பரோலின்.

தாழ்மைக்கு எடுத்துக்காட்டு

இத்திருத்தந்தை அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு, அமைதிக்காக அவர் விடுத்த அழைப்பும் ஒரு காரணம் என்றும், ஒரு மேய்ப்பராக, மனத்தாழ்மைக்கு முன்மாதிரிகையாய் இருந்தார் என்றும், இப்பண்பை, புனிதர்கள் அகுஸ்தின், சார்லஸ் பொரோமேயோ ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்டார் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.   

இத்திருத்தந்தை திருஅவையில் ஒருபோதும் முக்கியப் பதவிகளைத் தேடியதில்லை, அவர் ஓர் ஊழியராக, மனத்தாழ்மையோடு வாழ்ந்தார் என, அத்திருத்தந்தை காலத்தில் கர்தினாலாக இருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார் எனவும், அவர், மேய்ப்பராக, மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவினார், அவர் எளிய மக்களால் அதிகம் நினைவுகூரப்படுகிறார் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.   

உக்ரைன் போர்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்தும் தன் கருத்துக்களை தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், பேச்சுவார்த்தை வழியாக தீர்வுகாண்பதில் எதிர்கொள்ளப்படும்   பிரச்சனைகள் குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும், இம்மாத இறுதியில் இத்தாலியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் குறித்தும் குறிப்பிட்டு, நாட்டின் பணிக்காக அர்ப்பணிப்பதும், மக்களின் குரல்களுக்குச் செவிமடுத்து அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதும், பொது நலனுக்காக உழைப்பதும் நல்லதோர் அரசியலின் பண்பாகும் எனவும் உரைத்து, தனது தொலைக்காட்சி பேட்டியை நிறைவுசெய்தார், கர்தினால் பரோலின். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2022, 16:27