தேடுதல்

கர்தினால் மைக்கிள் செர்னி கர்தினால் மைக்கிள் செர்னி  

புலம்பெயர்ந்தோர் கல்வி பெற ஒன்றிணைந்து உழைப்போம்

குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு தொலைதூரக் கல்வி, கல்வி உதவித்தொகை போன்றவை உட்பட, கத்தோலிக்க நிறுவனங்கள் நல்ல நடைமுறைகளைச் செயல்படுத்த முடியும் - கர்தினால் செர்னி

மேரி தெரேசா: வத்திக்கான்

குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோர் கல்வி வாய்ப்புக்களைப் பெறுவதற்கு ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் முக்கியத்துவத்தை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

செப்டம்பர் 26, இத்திங்களன்று, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், “குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு கல்வி” என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் செர்னி அவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு-சாரா அமைப்புகள், பன்னாட்டு மற்றும், மனிதாபிமான உதவி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளின்றி புலம்பெயர்ந்தோருக்கு கல்வி வழங்குதல் சாத்தியமாகாது என்று கூறியுள்ளார்.  

இவ்வாறு செயல்படுவதன் வழியாக, நீதி, பரிவன்பு மற்றும், மனித மாண்பை நிலைநிறுத்தவும், அவற்றை அடையவும் முடியும் என்றும், குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோரின் கல்வியைப் பாதிக்கும் தற்போதைய நெருக்கடிகளைக் களைய, எந்தவித தனிப்பட்ட முயற்சியும் பலனளிக்காது என்றும், கர்தினால் செர்னி அவர்கள் தெரிவித்துள்ளார்.

குடிபெயர்ந்தோர் கல்வியில் சவால்கள்

குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு கல்வி வழங்குவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து ஆய்வுசெய்யவேண்டியது முக்கியம் என்பதை வலியுறுத்திப் பேசியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், இவர்களுக்கு தொலைதூரக் கல்வி, கல்விக்கு உதவித்தொகை போன்றவை உட்பட நல்ல நடைமுறைகளை கத்தோலிக்க நிறுவனங்கள் செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். 

கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்களை ஏற்றல், கல்வி நிறுவனங்களுக்கு இடையே வளங்களைக் கொடுத்து உதவுதல், மேய்ப்புப்பணிக்குப் பயிற்சியளித்தல் உட்பட பல பரிந்துரைகளை முன்வைத்த கர்தினால் செர்னி அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு உயர் கல்வி வழங்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

செப்டம்பர் 25, இஞ்ஞாயிறன்று 108வது குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோர் உலக நாளை திருஅவை சிறப்பித்தது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2022, 14:59