தேடுதல்

கலை, நம்பிக்கை திட்டத்தின் புதிய முயற்சி– “என்னைப் பின்தொடர்”

வருகிற அக்டோபர் 2, ஞாயிறு முதல் 16 ஞாயிறு வரை, ஒவ்வொரு நாளும் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 12. 30 மணிக்கு, புனித பேதுருவின் வாழ்வு 8 நிமிட சிறப்புக் காணொளி ஒளிபரப்பப்படும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வருகிற அக்டோபர் 2, ஞாயிறு முதல், 16  ஞாயிறு வரை, ஒவ்வொரு நாளும் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு 12. 30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் முன்புறம், புனித பேதுருவின் வாழ்வு குறித்த 8 நிமிட சிறப்புக் காணொளி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் மேய்ப்புப்பணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள கலை மற்றும் நம்பிக்கை என்ற புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, புனித பேதுருவின் வாழ்வைக் காணொளியாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி இருக்கும் எனவும், இது, இப்புனிதரின் மனித மற்றும் இறை அனுபவங்களை தியானிக்க உதவும் எனவும், கர்தினால் மவ்ரோ காம்பெத்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று, வத்திக்கான் நாட்டின் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் மவ்ரோ காம்பெத்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், புனித பேதுருவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் காணொளிக்காட்சி முதன் முறையாக புனித பேதுரு பெருங்கோவிலின் முன்புறம் ஒளிபரப்பப்படுவது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

புனித பேதுரு பெருங்கோவில் மேய்ப்புப்பணி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் "என்னைப் பின்தொடர்" என்னும் காணொளிக்காட்சி, புனிதரின் வாழ்வு, இயேசுவின் சீடராக அவர் பெற்ற அழைப்பு, பணி, இறப்பு போன்றவற்றை சிந்திக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

புனித பேதுருவின் வாழ்க்கை வரலாறு குறித்து பார்க்கும் திருப்பயணிகள், அப்புனிதரின் முன்மாதிரிகையான வாழ்வால் தூண்டப்பட்டு, இயேசுவை சந்திப்பதில், தங்களின் வாழ்வைப் புதுப்பித்து அதனை முழுமையாக வாழவும், இம்முயற்சி புனித பேதுரு பெருங்கோவில் மற்றும் அவரது கல்லறையைத் தரிசிக்கும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காணொளியில், பல்வேறு விரிவுரையாளர்களின் கருத்துக்கள், புனித பேதுரு உரோம் நகரில் நடந்து சென்ற பாதைகள், மேற்கொண்ட பயணங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும் எனவும், காணொளிக்கான படங்கள் புனித பேதுரு பெருங்கோவில் மற்றும், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் தொகுப்பிலுள்ள ஓவியங்கள் மற்றும் கிழக்கு மரபுவழி ஓவியங்களில் இருந்து எடுக்கப்பட்டன எனவும், உயர்தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, படங்கள், வார்த்தைகள் மற்றும் ஒலிகளை இணைத்து உணர்ச்சிப்பூர்வமாக இக்காணொளி உருவாக்கப்பட்டிக்கின்றது எனவும் பெருங்கோவிலின் மேய்ப்புப்பணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2022, 14:13