திலியில் Laudato Si’ போதனைகளின்படி புதிய திருப்பீடத் தூதரகம்
மேரி தெரேசா: வத்திக்கான்
கிழக்குத் திமோர் குடியரசின் தலைநகர் திலியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திருப்பீடத் தூதரகம், இந்நாட்டு மக்கள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று, அப்புதிய திருப்பீடத் தூதரகத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் கூறியுள்ளார், திருப்பீட செயலகத்தின் பேராயர் Peña Parra.
செப்டம்பர் 20, இச்செவ்வாய் மாலையில் அப்புதிய திருப்பீடத் தூதரகத்தைத் திறந்து வைத்த நிகழ்வில் பங்குபெற்ற, 1996ஆம் ஆண்டில் நொபெல் விருதுபெற்ற அரசுத்தலைவர் Ramos-Horta, அரசு பிரதிநிதிகள், மற்றும், பலருக்கு உரையாற்றிய பேராயர் Peña Parra அவர்கள், கிழக்குத் திமோரின் 500 வருட கத்தோலிக்க நம்பிக்கை வாழ்வு குறித்து எடுத்துரைத்தார்.
500 வருட கத்தோலிக்க நம்பிக்கை
முழுவதும் பசுமையாய் விளங்கும் இப்புதிய திருப்பீடத் தூதரகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato Si’ திருமடலில் குறிப்பிட்டுள்ள போதனைகளுக்கு ஒத்திணங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது என்றும், திருப்பீடத்திற்கும், கிழக்குத் திமோர் குடியரசுக்கும் இடையேயுள்ள மிகச் சிறந்த நல்லிணக்க உறவின் அடையாளமாக, இதன் கட்டடக்கலை அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார், பேராயர் Peña Parra.
கடந்த 500 ஆண்டுகளாக, தங்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் இம்மக்கள் கத்தோலிக்க நம்பிக்கையைக் காத்துவந்துள்ளது குறித்தும் பேராயர் Peña Parra அவர்கள் பாராட்டிப் பேசியுள்ளார்.
மனித உடன்பிறந்த உணர்வுநிலை குறித்த ஏடு
2019ஆம் ஆண்டில் அபு தாபியில் கையெழுத்திடப்பட்ட, உலக அமைதி மற்றும், ஒன்றிணைந்து வாழ்தல் குறித்த மனித உடன்பிறந்த உணர்வுநிலை குறித்த ஏட்டை, கிழக்குத் திமோர் நாடாளுமன்றம் ஏற்பதற்குத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இந்நாட்டின் இளையோர் மட்டுமல்ல, உலக இளையோர் அனைவரும் நல்ல குடிமக்களாக வாழ இந்த ஏடு நல்லதொரு வழிகாட்டி என்றும் பேராயர் Peña Parra அவர்கள் கூறியுள்ளார்.
உப்பு, மனித உடன்பிறந்த உணர்வுநிலையின் அடையாளம்
கிழக்குத் திமோர் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றியுள்ள பேராயர் Peña Parra அவர்கள், 2019ஆம் ஆண்டில் அபு தாபியில் கையெழுத்திடப்பட்ட, உலக அமைதி மற்றும், ஒன்றிணைந்து வாழ்தல் குறித்த மனித உடன்பிறந்த உணர்வுநிலை குறித்த ஏட்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
அவ்வுரையில் வருங்காலத் தலைமுறைகளுக்கு கல்வி வழங்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றிப் பேசியுள்ள பேராயர் Peña Parra அவர்கள், உப்பு, மனித உடன்பிறந்த உணர்வுநிலையின் அடையாளம் எனவும், இது அந்நாட்டு மக்களின் வாழ்வை வெளிப்படுத்துவதாக உள்ளது எனவும், கிழக்குத் திமோர் மக்கள் ஒப்புரவானவர்கள் மட்டுமல்ல, ஒப்புரவையும் ஏற்படுத்துபவர்கள் எனவும் பாராட்டியுள்ளார்.
கிழக்குத் திமோர் சுதந்திரம் பெற்றதன் மற்றும், திருப்பீடத்தோடு தூதரக உறவுகளை உருவாக்கியதன் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்புதிய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்