போர்க் காலத்தில் விண்ணேற்பு பெருவிழாவைச் சிறப்பிப்பது ஆறுதலாக...
மேரி தெரேசா: வத்திக்கான்
விண்ணக அரசியாம் அன்னை மரியாவின் முன்மாதிரிகை, போர் உருவாக்கியுள்ள இருளில் வாழ்ந்துவருகின்ற உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கையின் ஓர் அடையாளமாக உள்ளது என்று, ஆகஸ்ட் 15, இத்திங்களன்று விண்ணேற்பு பெருவிழா திருப்பலியில் கூறியுள்ளார், உக்ரைன் நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas.
உக்ரைன் நாட்டின் Odessa நகரிலுள்ள விண்ணேற்பு பேராலயத்தில் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் Kulbokas அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில், அப்பேராலயத்திலுள்ள புனித கன்னி மரியா திருப்படத்திற்கு மணிமுடி ஒன்றையும் சூட்டினார். இம்மணிமுடிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 03ம் தேதி வத்திக்கானில் நடைபெற்ற புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் தன் சிறப்பு ஆசிரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உக்ரைனில் போர் இடம்பெறும் சூழலில் விண்ணேற்பு பெருவிழாவின் முக்கியத்துவம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த பேராயர் Kulbokas அவர்கள், உக்ரைனில் அமைதி திரும்புவதற்காகச் செபிக்கவும், அந்நாட்டில் உரையாடல் இடம்பெறவும் திருத்தந்தை அழைப்புவிடுத்து வருவது நம்பிக்கையை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், மிகுந்த வேதனையைத் தருகின்றது என்றும், இந்தக் கொடூரச்சூழலில் இறைவனின் அன்னையிடம் மன்றாடுவதைத் தவிர வேறு வழியே கிடையாது என்றும் உரைத்துள்ள பேராயர் Kulbokas அவர்கள், திருத்தந்தை உலகின் ஆயர்களோடு சேர்ந்து, உக்ரைனையும், உலகையும் அமல அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்ததை, ஒவ்வொரு நாளும் நாங்கள் புதுப்பித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தை விதைக்கும் பகைவர்களுக்குச் சமமானவர்களாக நாங்கள் மாறக் கூடாது, ஏனென்றால், பாதிக்கப்படுவோர் வெறுப்புணர்வால் நிறைந்திருப்பவராக மாறினால், அவர் ஆன்மீக உணர்வை இழந்திருக்கிறார் என்று கூறலாம், எனவே எதிரிகளைப் போல நாங்களும் இருக்கக்கூடாது என்று, உக்ரைனில் பல அருள்பணியாளர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன் என்று பேராயர் Kulbokas அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் 15, இத்திங்களோடு உக்ரைனில் போர் தொடங்கி 173 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இப்போரில் காயமடைந்துள்ள உக்ரேனியர்களுக்கு உதவுகின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார், உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்