தேடுதல்

São Tomé & Príncipe குடியரசில் திருப்பலி São Tomé & Príncipe குடியரசில் திருப்பலி  

São Tomé & Príncipe குடியரசுடன் திருப்பீடம் ஒப்பந்தம்

திருஅவைக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளின் சட்ட விதிமுறைகளை வரையறை செய்கிறது, São Tomé குடியரசுடன் திருப்பீடம் மேற்கொண்ட புதிய ஒப்பந்தம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மத்திய ஆப்ரிக்காவின் கினி வளைகுடாவில் அமைந்துள்ள São Tomé மற்றும் Príncipe தீவு குடியரசின் கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அதன் நிறுவனங்களின் சட்ட ஆளுமையை அங்கீகரிக்கும் வகையில், அக்குடியரசுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது திருப்பீடம்.

திருப்பீடத்திற்கும், São Tomé and Príncipe குடியரசுக்கும் இடையேயான இவ்வொப்பந்தம் அதன் வெளியுறவு அமைச்சகத்தின் சந்திப்பு அறையில் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவான ஆகஸ்ட் 15, இத்திங்களன்று, கையெழுத்திடப்பட்டது.

ஆகஸ்ட் 16, இச்செவ்வாயன்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இத்தாலிய மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வொப்பந்தம் குறித்த 28 கட்டுரைகளைப் பிரசரித்துள்ளது. மேலும், இது திருப்பீடத்தின் ஒப்புதல் பெற்றபிறகு நடைமுறைக்கு வரும் என்றும் அத்தொடர்பகம் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருஅவை மற்றும் அதன் நிறுவனங்களின் சட்ட ஆளுமையின் அங்கீகாரத்தை இவ்வொப்பந்தம் நிறுவுவதுடன், திருஅவைக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளின் சட்ட விதிமுறைகளையும் இது வரையறுக்கிறது.

மேலும், "இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் ஒருங்கிணைக்கும் இவ்வொப்பந்தம், மக்களின் சுதந்திரம் மற்றும் சுயாட்சியைப் பாதுகாப்பதோடு மனிதரின் ஆன்மிக மற்றும் சமூக வாழ்வில் அனைவரையும் ஒன்றிணைந்து செயல்படத் தூண்டுகிறது.

திருப்பீடத்தின் சார்பாக, São Tomé மற்றும் Príncipeவிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Giovanni Gaspari அவர்களும், São  குடியரசின் சார்பாக அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் Edite Ramos da Costa Ten Jua அவர்களும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

São Tomé மற்றும் Príncipe தீவு நாடானது ஆப்ரிக்க நாடுகளில் மிகச் சிறியதாகும். 1970ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது இந்நாடு. கத்தோலிக்கரைப்  பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்நாடு, வறுமையின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2022, 13:56