மனித மாண்புகள் கட்டி எழுப்பப்படவேண்டும்-உலக காரித்தாஸ் அமைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இன்றைய நமது உலகம் ஒரு மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது என்றும், அதில் மக்கள் மனித மாண்புடன் வாழ்வதற்கான உரிமையை இழந்து வருகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார், பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் Aloysius John.
ஆகஸ்ட் 19, வெள்ளியன்று, கொண்டாடப்படும் உலக மனிதாபிமான தினத்திற்காக வெளியிட்டுள்ள காரித்தாஸ் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள Aloysius John அவர்கள், நமது உலகம் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வாக, ஒருங்கிணைந்த சூழலியலை ஆதரிக்கக்கோரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொடர் வேண்டுகோளை நாம் பிரதிபலித்து வருகின்றோம் என்றும் கூறியுள்ளார்.
பன்னாட்டுக் காரித்தாஸ் பணியாளர்கள் அனைவரும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும், குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ள Aloysius John அவர்கள், மனிதரின் நலன்களுக்காகத் தங்களின் முழு வாழ்வையும் அவர்கள் அர்பணித்துள்ளார்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
உக்ரைனில் நடந்துவரும் போர், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஆகியவை, பன்னாட்டளவில் எதிர்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுத்துள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளார் Aloysius John.
இந்த உலக மனிதாபிமான தினம், அனைத்து மக்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் பிரச்சனையை சரியான நடவடிக்கைகளின் வழியாகத் தீர்க்க ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள Aloysius John, உலகளாவிய ஒற்றுமை, அரசியல் ஆதரவு, மற்றும் மனித நோக்கத்திற்கான அர்ப்பணிப்பு மட்டுமே கணக்கிடமுடியாத இத்துன்பங்களைக் குறைக்க ஒரே வழி என்றும் எடுத்துரைத்துள்ளார்.
200 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 162 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு, இலட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டு வரும் ஏழை மக்களுக்குப் பணியாற்றி வருவதுடன், இயற்கைப் பேரிடர்களின்போதும், கோவிட்-19 போன்ற பெருந்தொற்று காலங்களிலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்