தேடுதல்

கனடா பூர்வீக இனத்தவர் பிரதிநிதிகள் சந்திப்பு கனடா பூர்வீக இனத்தவர் பிரதிநிதிகள் சந்திப்பு 

திருத்தந்தையின் கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

கனடாவில் இப்போது, 600க்கும் மேற்பட்ட பூர்வீக இனச் சமூகங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட First Nations இனக் குழுக்கள், இன்னும், Inuit, Métis ஆகிய இனச் சமூகங்களும் உள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

மன்னிப்பும் ஒப்புரவும், எப்போதும் நலமான, மகிழ்வான ஒரு வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றன. ஒப்புரவு என்பது, ஆன்மாவுக்கு எப்போதும் வசந்தகாலத்தைக் கொணர்கிறது. ஒப்புரவு என்பது, கடந்தகால அநீதிகளின் வடுக்களைத் திருத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதாகும் (நெல்சன் மண்டேலா). திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 24, வருகிற ஞாயிறன்று கனடா நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதும், அந்நாட்டில் கடந்த காலத்தில் கத்தோலிக்கர் உட்பட கிறிஸ்தவ சபைகளாலும், மற்றவராலும் கடுமையான அநீதிகளை எதிர்கொண்ட பூர்வீக இன மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும், அவர்களோடு ஒப்புரவை உருவாக்கவுமே என்று துணிந்து கூறலாம். தனது கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றிக் குறிப்பிட்டபோது, திருத்தந்தையே, இது ஒரு தவ திருப்பயணம் என்று, ஜூலை 17, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின்னர் கூறியிருக்கிறார். 2013ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கத்தோலிக்கத் திருஅவையில் தலைமைப் பணியை ஏற்றதிலிருந்து 36 வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பயணங்கள் குறித்து அவர் இவ்வாறு கூறியது கிடையாது. கனடாவுக்கு மேற்கொள்ளும் 37வது திருத்தூதுப் பயணத்தையே இவ்வாறு திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கு அடிப்படைக் காரணமும் உள்ளது.

கனடாவின் வரலாறு

கனடா, வட அமெரிக்க கண்டத்தில், வடக்கே வட முனை, கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடல், தெற்கே அமெரிக்க ஐக்கிய நாடு, மேற்கே பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ள மக்களாட்சி நாடாகும். வட அமெரிக்காவின் ஏறத்தாழ 41 விழுக்காட்டுப் பகுதியை, அதாவது, 99 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு, உலகின் இரண்டாவது பெரிய நாடாகவும் இது விளங்குகிறது. இதில் தரை 90,93,507 கி.மீ, மற்றும், தண்ணீர் 9,91,163 கி.மீ ஆகும். கனடாவின் இத்தகைய பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கையமைப்புகளையும் காலநிலைகளையும் கொண்டுள்ளது. கனடா, பத்து மாநிலங்களையும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். இந்நாட்டின் தலைநகரம் ஒட்டாவா.  டொரென்டோ, மோன்டரியல், வான்கூவர் ஆகிய மூன்றும் இந்நாட்டின் பெருநகரங்களாகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும், கனடாவின் ஆட்சி மொழிகளாகும்.

உலகில் மனிதரின் குடியேற்றம், வட மற்றும், தென் அமெரிக்க கண்டங்களில் கடைசியாக இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஐம்பதாயிரம் முதல் பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் இடம்பெற்ற காலநிலை மாற்றத்தால், கடல்மட்டம் குறையத் தொடங்கியுடன், பெரிங் பாலம் (Bering land bridge) அதாவது வட அமெரிக்காவின் வடமேற்கிலுள்ள அலாஸ்காவையும், சைபீரியாவையும் இணைக்கும் ஏறத்தாழ ஆயிரம் மைல்கள் நீளம் கொண்ட, இயற்கையாக அமைந்த பாலம் வழியாக மக்கள், அமெரிக்க கண்டங்களுக்குக் குடிபெயர ஆரம்பித்துள்ளனர். இங்கு நடந்ததுவே, மனித இனம், கண்டம் விட்டு கண்டம் நகர்ந்த முதல் நிகழ்ச்சியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கையாக அமைந்த பெரிங் பாலம், தொடர்ந்து பெய்துவரும் பனிப்பொழிவாலும் பனிசூழ்ந்த அலாஸ்காவிலிருந்து வரும் தென்மேற்குக் காற்றாலும் தற்போது பனியால் சூழப்பட்டு மூடிக்கிடக்கிறது. பனிக் காலத்தில் (Ice Age) தப்பிய மனித இனம், இப்பாலம் வழியாக அலாஸ்காவிற்குச் சென்றுள்ளது. இப்பூமியின் பெரும் பகுதியை பனிப் பாறைகளால் மூடியிருந்த பனிக் காலம், ஏறத்தாழ 11,700 ஆண்டுகளுக்குமுன்பு முடிவுற்றது எனக் கூறப்படுகிறது..

மக்களின் குடியேற்றம்

அமெரிக்க கண்டங்களில் முதலில் குடியேறிய மக்கள் பற்றிய ஆய்வுகளில், இம்மக்கள் பெரிங் பாலத்தோடு தொடர்புடையவர்களாகத் தெரியவந்துள்ளது. இம்மக்கள், பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ஆண்டுகள் வரை தனித்து வாழ்ந்து வந்துள்ளனர். ஏறத்தாழ 16, 500 ஆண்டுகளுக்குமுன் பனிப்பாறைகள் உறையத் தொடங்கியவுடன், இம்மக்கள், கனடாவின் தெற்கு மற்றும், கிழக்குப் பகுதிக்கும், அப்பகுதிகளைக் கடந்தும் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். வட அமெரிக்காவில் முதலில் வாழத்தொடங்கிய மக்கள்,      குறைந்தது 14 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கனடா பகுதிக்குச் சென்றுள்ளனர். இம்மக்கள் நிரந்தரமாக குடியேற்றங்களை அமைத்து, வேளாண்மை, வர்த்தகம், போன்ற தொழில்களில் ஈடுபட்டனர்.

கனடாவின் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ரெய்மண்ட் புவாசோன் அவர்களின் கூற்றுப்படி, கனடாவில் இப்போது, 600க்கும் மேற்பட்ட பூர்வீக இனச் சமூகங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட First Nations இனக் குழுக்கள், இன்னும், Inuit, Métis ஆகிய இனச் சமூகங்களும் உள்ளன. 17ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் ஐரோப்பிய குடியேற்றதாரர்கள், First Nations என்ற இனத்தோடு திருமணம் செய்துகொண்ட கலப்பு இனத்தவரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தையும் மொழியையும் கொண்டிருக்கவில்லை. இவர்களோடு உள்ள உறவுகளும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. இந்த பூர்வீக இனத்தவர் தவிர, ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், ஸ்காட்லாந்துகாரர், ஜெர்மானியர், இத்தாலியர், இந்தியர், இலங்கையர் என பல நாட்டவரும் வாழ்ந்து வருகின்றனர்.     

பூர்வீக இனச் சமூகங்கள்

கனடா பூர்வீக இனத்தவர்
கனடா பூர்வீக இனத்தவர்

கனடாவின் பூர்வீக இன சமூகங்களின் சில கலாச்சாரங்கள், 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும், 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அந்நாட்டுப் பகுதியில் குடியேறிய ஐரோப்பிய நாடுகாண் பயணிகளால் அழிக்கப்பட்டுள்ளன. அக்கலாச்சாரங்கள், தொல்பொருள் ஆய்வுகள் வழியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் ஐரோப்பியர்கள் குடியேறிய காலக்கட்டத்தில் பூர்வீக இன மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இருபது இலட்சமாக இருந்தது. ஐரோப்பியக் காலனிகளால் இவ்வெண்ணிக்கை 40 முதல் 80 விழுக்காடாகக் குறைந்தது. Beothuk போன்ற First Nations இனங்களைச் சார்ந்த பலர் காணாமல்போயினர். காய்ச்சல், அம்மை, பெரியம்மை போன்ற ஐரோப்பியர்கள் பரப்பிய நோய்களால் அம்மக்களில் பலர் இறந்தனர். ஏனென்றால், இந்நோய்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் இருந்தது. மேலும், விலங்குகளின் தோல் வர்த்தகத்தையொட்டி இடம்பெற்ற ஆயுதமோதல்கள், காலனி அதிகாரிகளோடு நடத்திய சண்டைகள், குடியேற்றதாரர்களின் நில அபகரிப்பு, தன்னிறைவு இழப்பு போன்றவையும், பல பூர்வீக இனங்களின் மக்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்திருந்தன. அதேநேரம், ஐரோப்பியர்கள் கனடாவின் First Nations, Inuit போன்ற பூர்வீக இன மக்களோடு முதலில் நல்ல அமைதியான உறவைக் கொண்டிருந்ததால், கனடாவில் ஐரோப்பிய காலனிகள் வளரவும் அது உதவியது. கனடாவில் குடியேறிய ஐரோப்பியர்கள், 18ம் நூற்றாண்டிலிருந்து, அப்பூர்வீக இன மக்களை, தங்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிணையுமாறு ஊக்கமூட்டினர். 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி மற்றும், 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், இம்மக்கள் ஐரோப்பியக் கலாச்சாரத்தோடு ஒன்றிணையவும், புலம்பெயரவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். இது கனடாவின் காலனி ஆதிக்கத்தின்போது இடம்பெற்ற தீமைகளில், ஒன்றாக இருந்தது. இத்தீமை, மாணவர் விடுதிப் பள்ளிகள் என அழைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றது.

மாணவர் விடுதிப் பள்ளிகள்

கனடா மாணவர் விடுதிப் பள்ளிகள்
கனடா மாணவர் விடுதிப் பள்ளிகள்

கனடா அரசு, மாணவர் விடுதிப் பள்ளிகளை உருவாக்கி அவற்றுக்கு நிதியுதவி செய்து, அவற்றை மேலாண்மை செய்யும் பொறுப்பை கத்தோலிக்கத் துறவு சபைகள் உட்பட கிறிஸ்தவ சபைகளிடம் ஒப்படைத்தது. இது ஒரு வகை பண்பாட்டுப் படுகொலை ஆகும். இப்பள்ளிகளில், இப்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக தங்கவைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன், அவர்கள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மேற்கத்திய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பொதுவாக பூர்வீக இனப் பிள்ளைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மறக்கடிக்கவும், அவர்களிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைத் திணிப்பதுமே இந்தப் பள்ளிகளின் நோக்கமாக இருந்தன. இந்நோக்கங்களை மீறிய பூர்வீக இனப் பிள்ளைகளை, தங்கள் வழிக்கு கொண்டுவர அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதால், பல பிள்ளைகள் இறந்தனர். அவ்வாறு இறந்த பிள்ளைகளை, பள்ளிக்கு அருகே சவக்குழிகளில் புதைத்துவிட்டனர். மேலும் இப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சந்திக்க அவர்களின் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அப்பிள்ளைகளின் நிலையைப் பெற்றோர்களால் அறிய முடியவில்லை. எனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் இந்த கட்டாய விடுதிப் பள்ளி முறையை எதிர்த்தனர். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு பிள்ளைகள் வீட்டிற்கு வரும்வகையில் சாதாரண பகல் நேரப் பள்ளிகளைத் துவக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் கனடா அரசும், கிறிஸ்தவ சபைகளும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தன. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்ட இந்தப் பள்ளிகளில், 1,50,000 கனடாவின் பூர்வீக இனத்தவரின் பிள்ளைகள் தங்கிப் படித்தனர். 1930களில் இந்தப் பள்ளிகளில் பூர்வீக இன மக்களின் 30 விழுக்காட்டு பிள்ளைகள் படித்தனர். போதிய ஆவணம் இல்லாத நிலையில் இப்பள்ளி வளாகங்களில் இறந்த கனடாவின் பூர்வீக இனங்களின் குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அம்மக்களின் தொடர் போராட்டத்தால், கனடா அரசு இந்த விடுதிப் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுத்தது. எனவே இந்தப் பள்ளிகளை நிறுத்தும் பணி 1960ஆம் ஆண்டில் படிப்படியாகத் தொடங்கப்பட்டு 1988ஆம் ஆண்டில் நிறைவுற்றது.

இச்சிறாருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது கனடா திருத்தூதுப் பயணத்தின்போது மன்னிப்புக் கேட்பார் மற்றும் ஒப்புரவு முயற்சிகளை ஊக்கப்படுத்துவார். இத்திருத்தூதுப் பயணத்தில் கனடாவைப் பார்வையிடுவதோ அல்லது, கத்தோலிக்க குழுமங்களைச் சந்திப்பதோ முக்கிய நோக்கம் அல்ல, மாறாக, கனடாவில் இடம்பெற்ற காலனி ஆதிக்கத்தால் துன்பங்களை எதிர்கொண்ட அந்நாட்டின் பூர்வீக இன மக்களோடு திருத்தந்தை தன் அருகாமையை வெளிப்படையாகத் தெரிவிப்பதாக இருக்கும். திருத்தந்தையின் இப்பயணத்திற்க்காகச் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூலை 2022, 13:37