தென் சூடானின் வேதனை நிறைந்த பக்கங்களை மூடுவோம்
மேரி தெரேசா: வத்திக்கான்
தென் சூடான் நாட்டின் வேதனை நிறைந்த பக்கங்களை மூடுவோம், மற்றும், அந்நாட்டில் ஒப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவோம் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டின் தலைநகர் ஜூபாவில் கூறியுள்ளார்.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து, காங்கோ மக்களாட்சி குடியரசு, மற்றும், தென் சூடான் ஆகிய இரு ஆப்ரிக்க நாடுகளில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுவரும் கர்தினால் பரோலின் அவர்கள், காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து தென் சூடான் தலைநகர் ஜூபாவுக்குச் சென்றுள்ளார்.
ஜூலை 5, இச்செவ்வாயன்று ஜூபா நகர் சென்றுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அந்நாட்டின் அரசுத்தலைவர் Salva Kiir Mayardit அவர்களையும், உதவி அரசுத்தலைவர் Riek Machar அவர்களையும் சந்தித்தார்.
காங்கோ மக்களாட்சி குடியரசில் தனக்கு கிடைத்த அருமையான அனுபவங்களோடு தென் சூடானில் திருத்தந்தையின் பிரதிநிதியாக மேய்ப்புப்பணி பயணத்தைத் தொடங்கியுள்ளேன் என்றுரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், 2023ம் ஆண்டில் தென் சூடானில் நடைபெறும் பொதுத்தேர்தல்கள், இறுதி அமைதி ஒப்பந்தங்களோடும், ஒப்புரவை உருவாக்கும் திறனோடும் இடம்பெறும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், தென் சூடான் அரசுத்தலைவர் Salva Kiir Mayardit அவர்கள், உதவி அரசுத்தலைவர் Riek Machar, Rebecca Nyandeng De Mabio ஆகியோரோடு நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில், எதிர்பாராதவிதமாக திருத்தந்தை இத்தலைவர்களின் காலடிகளை முத்திசெய்து தென் சூடானின் அமைதிக்காக கெஞ்சிக் கேட்டுக்கொண்டதை, கர்தினால் பரோலின் அவர்கள் நினைவுபடுத்தினார்.
அதே அமைதிக்காக இன்று செபிப்போம் என்றும் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இப்பயணத்தை நிறைவுசெய்து, ஜூலை 9ம் தேதி உரோம் திரும்புவார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் ஒன்றாந்தேதி முதல் 8ஆம் தேதி வரை, தன் முழங்கால் மூட்டுவலி காரணமாக, இவ்விரு நாடுகளிலும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள இயலாமல் இருந்த காரணத்தினால், அவர் அந்நாடுகளுக்கு கர்தினால் பரோலின் அவர்களை அனுப்பியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்