தேடுதல்

கனடா பழங்குடியினருடன் திருத்தந்தை கனடா பழங்குடியினருடன் திருத்தந்தை  

ஒப்புரவாக்க, குணப்படுத்த திருத்தந்தையின் கனடா தவப்பயணம்!

கனடாவுக்கான திருத்தந்தையின் தவப்பயணம், முதன்மையாக எட்மண்டனில் உள்ள பழங்குடி மக்களைச் சந்திப்பதற்காக அர்ப்பணிக்கப்படும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கனடாவுக்கான திருத்தூதுப் பயணமானது அந்நாட்டின் பழங்குடி மக்களைக் குணப்படுத்துவதற்கும், அவர்களுடனான நல்லிணக்கத்திற்கும் உதவும் ஒரு தவப் பயணமாக அமையும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 20, இப்புதனன்று, வத்திக்கானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த மத்தேயோ புரூனி அவர்கள், திருத்தந்தையின் 37-வது திருத்தூதுப் பயணம் குறித்த செய்திகளை வழங்கியதுடன், வட அமெரிக்க நாடு திருத்தந்தை பிரான்சிஸ் சந்திக்கும் 56வது நாடாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் Quebecவிலுள்ள புனித அன்னா தேசிய திருத்தலத்தில் புனித இரண்டாம் யோவான் பவுலின் வழியில் திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், அமெரிக்காவின் முதல் புனிதரான Kateri Tekakwithaன் திருவுருவத்தை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார் மத்தேயோ புரூனி.

புனித அன்னா, பழங்குடியினருக்கு, அதிலும் குறிப்பாக, முதியோருக்கான மரியாதையை வழங்கும் விதத்தில் மிக முக்கியமானவர் என்று எடுத்துக்காட்டியுள்ள மத்தேயோ புரூனி, இயேசுவின் தாத்தாவும் பாட்டியுமான புனிதர்கள் அன்னாவும் சுவக்கினும் வயது முதிர்ந்தோரின் பாதுகாவலர்களாகப் போற்றப்பெறுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

கனடா நாட்டின் அரசு உயரதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் பழங்குடியின மக்களின் அழைத்தலுக்குப் பதிலிறுப்பு செய்வதன் அடையாளமாகத்தான் திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் மத்தேயோ புரூனி.

திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம் மற்றதுபோலல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும், காரணம், திருத்தந்தை தனது பயணத்தின் இரண்டாவது முறை வரும்போது மட்டுமே, அதாவது, ஜூலை 27 புதனன்று, கியூபெக்கில் ஒரே ஒருமுறை மட்டுமே அதிகாரிகளைச் சந்திப்பார் என்றும் கூறியுள்ளார் மத்தேயோ புரூனி.

திருத்தந்தையின் இந்தப் பயணத்தில் அவருடன் வழக்கமாகப் பயணிப்பவர்கள் உடன் செல்வார்கள் என்றும், ஒருங்கிணைத்த மனித முன்னேற்ற திருப்பீட அமைப்பின் தலைவர் கர்தினால் Michael Czerny, வத்திக்கான் ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet ஆகிய இரு கனடா நாட்டு கர்தினால்களும் உடன் செல்வர் என்றும் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார் மத்தேயோ புரூனி.

கனடாவில் திருத்தந்தையின் நிகழ்வுகள் மற்றும் திருப்பலிகள் உட்பட திருத்தந்தை வழங்கும் தனது ஒன்பது சொற்பொழிவுகளை ஸ்பானிஷ் மொழியில் வழங்குவார் என்றும் எட்மண்டன் மற்றும் கியூபெக்கில் புகைவரி எழுத்துக்கள் வழியாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்புகள் வழங்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் மத்தேயோ புரூனி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2022, 14:49