தேடுதல்

 சிறாரை அணைத்துக்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் (2015.01.12/19) சிறாரை அணைத்துக்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் (2015.01.12/19) 

இளையோருக்கு உயிரியல்அறநெறியியல் வழிகாட்டி நூல்

மனித வாழ்வின் அழகு, மற்றும், அதன் தனித்துவம் குறித்த உண்மையை இளையோர் உள்வாங்குவதற்கு உதவியாக, உயிரியல்அறநெறியியல் வழிகாட்டி என்ற நூல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

அண்மையில் நிறைவடைந்த "Amoris Laetitia குடும்ப" ஆண்டு, மற்றும், பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு ஆகிய இரண்டின் பின்புலத்தில், உயிரியல்அறநெறியியலில் இளையோருக்கு உதவும்வண்ணம், வழிகாட்டி நூல் ஒன்றை, மின்னணு நூலாக (e-book) Jérôme Lejeune நிறுவனமும் பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையும் இணைந்து வெளியிட்டுள்ளன.

மனித வாழ்வின் அழகு, மற்றும், அதன் தனித்துவம் குறித்த உண்மையை இளையோர் உள்வாங்குவதற்கு உதவியாக, இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம் ஆகிய நான்கு மொழிகளில் இணையதளத்தில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது என, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kevin Farrell அவர்கள் கூறியுள்ளார்.

இக்கால அறிவியல் மற்றும், தொழில்நுட்ப வளர்ச்சி சிறாரையும், இளையோரையும் சிலநேரங்களில் திசைமாறிச் செல்லவைக்கும்வேளை, மனித வாழ்வு மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கை குறித்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, இந்நூலில் பதில்கள் உள்ளன என்றும் கர்தினால் Farrell அவர்கள் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு பானமாவில் நடைபெற்ற உலக இளையோர் விழாவின்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்நூல், ஜூலை 15, இவ்வெள்ளியன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் பிரெஞ்சு மொழிப் பதிவு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"உயிரியல்அறநெறியியலுக்கு வழிகாட்டிகள்: இளையோருக்கு உயிரியல்அறநெறியியல் வழிகாட்டி கையேடு" என்ற தலைப்பில் இந்த மின்னணு நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை www.laityfamilylife.va; www.fondationlejeune.org; www.fundacionlejeune.es ஆகிய முகவரிகளில் கட்டணமின்றி பெறலாம் என பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை அறிவித்துள்ளது.

பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு, உரோம் நகரில் இவ்வாண்டு ஜூன் மாதம் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. Amoris Laetitia குடும்ப ஆண்டு, 2021ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல், 2022ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி வரை சிறப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2022, 15:10