கனடா: பூர்வீக இனத்தவரோடு திருத்தந்தை தன் உடனிருப்பை தெரிவிப்பார்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, கனடா நாட்டிற்கு, ஜூலை 24, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படுகிறார்.
இம்மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை கனடாவில் நடைபெறும் இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தையோடு செல்லவிருக்கும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இப்பயணத்தின் முக்கியத்துவம் குறித்து வத்திக்கான் செய்திகளிடம் எடுத்துரைத்துள்ளார்.
கனடாவின் பூர்வீக இன மக்களை அரவணைத்து, அவர்களோடு தன் உடனிருப்பைத் தெரிவிப்பதற்கு நீண்ட நாள்களாக திருத்தந்தை கொண்டிருந்த ஆவலை நிறைவேற்றும் ஒரு திருப்பயணமாக இது அமைந்துள்ளது என்றுரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் உடல்நிலை அனுமதிக்கும்போது, அவர் ஆப்ரிக்காவுக்கும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஆறு நாள்கள் தங்குவதற்குத் தன்னையே தயாரித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையை, அந்நாட்டினர் அனைவரும், குறிப்பாக, கடந்தகால காலனி ஆதிக்கத்தின் மனநிலையால் மிகவும் கொடூரமான வன்முறை மற்றும், உரிமை மீறல்களை எதிர்கொண்ட பூர்வீக இனங்களின் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர் என கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
பூர்வீக இனத்தவரின் தனித்துவத்தை அழிக்கும் நோக்கத்தில், அம்மக்களை, ஐரோப்பிய கலாச்சாரத்தோடு ஒன்றிணைக்கும் காலனி ஆதிக்கத்தின் கொள்கைகள் மற்றும், நடவடிக்கைகளால் அவர்கள் கடுந்துயரங்களைச் சந்தித்துள்ளனர் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
கனடாவில் இம்மக்களோடு ஏற்கனவே இடம்பெற்றுவரும் ஒப்புரவு, மற்றும், குணப்படுத்தல் நடவடிக்கைக்கு உதவும் வகையில், ஒரு தவ திருப்பயணமாக, திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்கிறார் எனவும், பூர்வீக இன மக்களின் பிரதிநிதிகளை வத்திக்கானில் சந்தித்த பின்னர், மீண்டும் கனடாவில் அம்மக்களைச் சந்தித்து அவர்களிடம், கிறிஸ்தவர்களின் கடந்தகாலத் தவறுகளுக்காக திருத்தந்தை மன்னிப்பு கேட்பார் மற்றும், அவர்களோடு சேர்ந்து செபிப்பார் எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
பல நாடுகளின் தலத்திருஅவைகளைப் போலவே, கனடா திருஅவையும் உலகப்போக்குச் சவால்களை அதிகமாக எதிர்கொண்டுவரும்வேளை, திருத்தந்தை, தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், தலத்திருஅவையைச் சந்தித்து அவர்களின் மறைப்பணியை ஊக்கப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்