கப்பல் பணியாளர்கள் கடற்கரைக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
கப்பலில் பணியாற்றுவோர், பணியிலிருந்து விடுபட்டு கடற்கரைக்கு வந்து ஓய்வு எடுப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படவேண்டும் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், வெளியிட்டுள்ள கடல் ஞாயிறு செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார்.
சில அரசுகளும், சில கப்பல் நிறுவனங்களும், கப்பல் பணிக்குழு, கடற்கரைக்கு வந்து ஓய்வு எடுப்பதைத் தடைசெய்வதற்கு கோவிட்-19 பெருந்தொற்றை, ஒரு காரணியாகப் பயன்படுத்துவது, இனிமேலும் இடம்பெறக் கூடாது என்று, கர்தினால் செர்னி அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை 10, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் கடல் ஞாயிறுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், கப்பலில் பணியாற்றுவோர், பெருந்தொற்று தடுப்பூசிகளைப் போட்டிருந்தாலும்கூட பல பணியாளர்கள் கடற்கரைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பணியாளர்கள் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும்போது அவர்கள் கடற்கரையில் காலூன்றவும், தங்களின் உடன்பணியாளர்கள் தவிர, மற்ற மக்களைச் சந்திக்கவும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர் எனவும் கர்தினாலின் செய்தி கூறுகிறது.
உலகில் நாடுகள் தங்களின் எல்லைகளைத் திறந்து வருகின்றன, கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தளர்த்தி வருகின்றன, மற்றும், பலர் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர், ஆனால் கப்பல் பணியாளர்கள் அவ்வாறு வாழ முடியவில்லை, இது பெரும் அநீதி என்றும் அச்செய்தி கூறுகிறது.
சில பணியாளர்கள், ஒரு நாட்டின் சரியான உரிமையைக் கொண்டிருந்தால் மட்டுமே கடற்கரைக்கு வர அனுமதியளிக்கப்படுகின்றனர், இந்தப் பாகுபாடு அநீதியானது, மற்றும், அறநெறிக்குப் புறம்பானது எனவும், இப்பணியாளர்களும் தவிர்க்கமுடியாத மனித மாண்பைக் கொண்டிருக்கின்றனர், அது மதிக்கப்படவேண்டும் எனவும் கர்தினால் செர்னி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடல் பணியாளர்கள் உரிமை குறித்த 2006ஆம் ஆண்டின் (MLC) ஒப்பந்தத்தையும் குறிப்பிட்டுள்ள கர்தினால் செர்னி அவர்கள், இப்பணியாளர்கள், எவ்விதப் பாகுபாடும் இன்றி சமமாக நடத்தப்படவேண்டும், அவர்கள் உலகில் எங்கிருந்தாலும், கப்பலைவிட்டு குறைந்த காலத்திற்காவது இறங்கி கடற்கரைக்குவர அனுமதியளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று கடல் ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. உலக அளவில் சரக்கு கப்பல்களில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்