வாழ்வின் இறையியல் அறநெறிகள் பற்றிய திருத்தந்தையின் போதனைகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
"வாழ்வின் இறையியல் அறநெறிகள்: திருவிவிலியம், பாரம்பரியம், நடைமுறைச் சவால்கள்" என்ற தலைப்பில், ஜூலை முதல் தேதியான இவ்வெள்ளியன்று விற்பனைக்கு வந்துள்ள நூலின் இலக்குகள் குறித்து வத்திக்கான் ஊடகத்திடம் விளக்கியுள்ளார், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா.
திருப்பீட வாழ்வுக் கழகம், இறையியல் அறநெறி சார்ந்த பல்வேறு தலைப்புக்களில் ஏற்பாடு செய்த கருத்தரங்குகளில் இடம்பெற்ற தீர்மானங்கள், மற்றும், அவற்றில் முன்வைக்கப்பபட்ட பரிந்துரைகளைத் தொகுத்து தயாரிக்கப்பட்ட நூலை, வத்திக்கான் பதிப்பகம், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.
இந்நூல் தயாரிக்கப்பட்ட முறை, அது மனித வாழ்வு குறித்து கூறும் கருத்துக்கள், அதில் வலியுறுத்தப்பட்டுள்ள மானுடவியல் சார்ந்த அடிப்படை இறையியல் அம்சங்கள் உட்பட, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார், இந்நூலின் ஆசிரியரான பேராயர் பாலியா.
திருப்பீட வாழ்வு கழகம், மனித வாழ்வின் இறையியல் அறநெறிகளின் பல்வேறு கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது என்று கூறியுள்ள பேராயர் பாலியா அவர்கள், உயிரியல் அறநெறிக் கூறுகளை புதிய ஒளியில், தெளிந்துதேர்ந்து, மனச்சான்றை உருவாக்குவது குறித்து இந்நூல் வலியுறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மனிதரும், ஒன்றிணைந்த வாழ்வுக்குத் திறந்தமனதாய் இருக்கவும், மற்றவருக்குத் திறந்தமனதாய் இருந்து அன்பு வழியாக நிறைவைக் காணவும், மற்றவருக்கு உண்மையான அறநெறிகளை எடுத்துரைக்கவும் அழைக்கப்படுகின்றனர் எனவும், பேராயர் பாலியா அவர்கள் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்