வன்முறையைக் கண்டு நாம் அமைதியாக இருக்க முடியாது : பேராயர் காலகர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடிய விரைவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கீவ் நகருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
ஜூலை 12, இச்செவ்வாயன்று இத்தாலியத் தூதரக இல்லமான Palazzo Borromeoவில் ரிமினியின் வருடாந்திர கூட்டத்திற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய பேராயர் காலகர், உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குத் தான் சென்றதையும், அங்குப் போரினைத் தடுக்க எடுக்கப்படாத முயற்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களை முறியடிக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்றும், உலகில் என்ன நடக்கிறது என்பதைக் காணும் திறனை தூதரக உறவுகள் கொண்டிருக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டிய பேராயர் காலகர், இந்த உறவுகள் அனைத்துலக சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.
உக்ரைனில் நடைபெறவேண்டிய புனரமைப்பு பணிகள் பற்றி தான் முன்கூட்டியே பேசினாலும், அதுபற்றிய நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது நல்லது என்று எடுத்துரைத்த பேராயர் காலகர், எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுடன் நாட்டின் சமூகக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாம் அவர்களுக்குத் துணை இருக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் போரை நாம் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், கடவுளின் ஆவி தரும் அமைதித் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ள பேராயர் காலகர், கடவுளின் உயர்ந்த கொடையான அமைதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மனிதர் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்