தேடுதல்

காலநிலை மாற்றம் காலநிலை மாற்றம் 

காலநிலை மாற்ற ஒப்பந்தம், பாரிஸ் ஒப்பந்தத்தில் திருப்பீடம்

நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தை எவ்வாறு வடிவமைக்கப்போகிறோம் என்பதற்கு புதியதோர் உரையாடல் அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வரைவு ஒப்பந்தத்திற்கு (UNFCCC), பாரிஸ் ஒப்பந்தத்தின் சட்டரீதியான தேவைகளைக் கவனத்தில்கொண்டு,  அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த விவரங்களை, வத்திக்கான் நாட்டின் பெயரிலும், அதன் சார்பாகவும் திருப்பீடம் விரைவில் சமர்ப்பிக்கும் என பேராயர் Gabriele Giordano Caccia அவர்கள் அறிவித்துள்ளார்.

ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Caccia அவர்கள், ஜூலை 06 இப்புதனன்று, இதனை ஐ.நா. தலைமைப் பொதுச் செயலரிடம் கூறியுள்ளார்.  

காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, திருப்பீடம் அனைத்து நாடுகளின் முயற்சிகளுக்கு அறநெறியின் அடிப்படையில் தன் ஆதரவை வழங்கும் எனவும் கூறியுள்ள பேராயர் Caccia அவர்கள், மனிதசமுதாயம், மற்றும், நம் பொதுவான இல்லத்திற்கு, காலநிலை மாற்றம் முன்வைத்துள்ள சவால்களுக்குச் சரியான முறையில் பதிலளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தை எவ்வாறு வடிவமைக்கப்போகிறோம் என்பதற்கு புதியதோர் உரையாடல் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதையும் பேராயர் Caccia அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் வரைவு ஒப்பந்தம், காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் செயல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு திருப்பீடம் தொடர்ந்து வழிகாட்டும் என்பதற்கும், பேராயர் Caccia அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2022, 13:49