தேடுதல்

இந்தோனேசியாவில் உலகப் பெருங்கடல் தினம்  இந்தோனேசியாவில் உலகப் பெருங்கடல் தினம்  

திருப்பீடத்தில் கடல்வளம் குறித்த ஒருநாள் கருத்தரங்கு

கடல் மற்றும் பெருங்கடல்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவற்றைப் பாதுகாக்கவும், அனைவரும் முன்னுரிமை அளிக்கவேண்டும் : பாப்பிறை அறிவியல் கழகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மாசுகேடு, மீன்வளச் சுரண்டல், கடல்வளம் அழித்தல் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றால் நமது பெருங்கடல்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் உள்ளது என்று திருப்பீடத்தில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார் பாப்பிறை அறிவியல் கழகத்தின் தலைவரும் பேராசிரியருமான Joachim von Braun.

உலகப் பெருங்கடல் தினமான ஜூன் 8, இப்புதனன்று, வத்திக்கானில் மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கும் உயிர்வாழ்வதற்கும் இன்றியமையாத உலகப் பெருங்கடல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளைப் பகிர்ந்துகொள்வதற்காக, உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்களை அழைத்து அவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியுள்ளது பாப்பிறை அறிவியல் கழகம்.

இத்தாலியின் Stazione Zoologica Anton Dohrn ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பாப்பிறை அறிவியல் கழகம் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தங்கம், உலகப் பெருங்கடல்களைக் காப்பாற்றுவதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பகிர்ந்துகொள்வதையும், ஐக்கிய நாடுகள் அவையின் 2021-2030ம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சிக்கான கடல் அறிவியலின் பங்களிப்பையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகின் கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்மீதான மனித தாக்கம் முன்பை விட இன்று அதிகமாக உணரப்படுகிறது என்று எச்சரித்துள்ள பாப்பிறை அறிவியல் கழகம்,  இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 1,100 கோடியாக அதிகரிக்கவுள்ள நிலையில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

"நோய்வாய்ப்பட்ட உலகில் ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியமில்லை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி உலகின் ஏழ்மையான மக்களைப் பாதிக்கும் கடல் வளங்களின் பயன்பாட்டில், நிலையான வளர்ச்சிக்கு அனைத்து மனித இனமும் உழைக்க வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளது பாப்பிறை அறிவியல் கழகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2022, 15:28