2021ல் பிறரன்பு பணிகளுக்கு ஒரு கோடி யூரோக்கள் உதவி
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தையின் பணிக்கும், உலக அளவில் பிறரன்புக்கும் நிதி ஆதரவளிக்கும் புனித பேதுருவின் காசு (Peter's Pence) எனப்படும் திருஅவையின் அமைப்பு, 2021ம் ஆண்டில் ஏறத்தாழ ஒரு கோடி யூரோக்கள் மதிப்பிலான பிறரன்புத் திட்டங்களுக்கு உதவியிருக்கின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 இவ்வியாழனன்று புனித பேதுருவின் காசு அமைப்பு வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டின் நிதி அறிக்கையில், கடந்த ஆண்டில் உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 4 கோடியே 70 இலட்சம் யூரோக்கள் நன்கொடையாகக் கிடைத்தன எனவும், அவ்வமைப்பு, உதவி தேவைப்பட்ட 67 நாடுகளுக்கு உதவியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அதிகமான நன்கொடைகளை வழங்கின என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருஅவையின் வெளிப்படைத்தன்மையின் அடையாளமாக, பேதுரு காசு அமைப்பு வெளியிட்டுள்ள ஐந்து பக்க நிதி அறிக்கை பற்றிக் கூறியுள்ள திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் இயேசு சபை அருள்பணி Juan Antonio Guerrero Alves அவர்கள், 2021ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டில் 4 கோடியே 41 இலட்சம் யூரோக்களே கிடைத்தன எனவும், இதற்கு கோவிட்-19 பெருந்தொற்று பரவலே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
புனித பேதுருவின் வழிவருபவரின் உலகளாவிய மறைப்பணிக்கு உதவுவதற்கென்று பேதுரு காசு என்ற பெயரில் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிதியுதவிகள், திருப்பீடத்தின் பல்வேறு பணிகளுக்கும் (எ.க. அருள்பணியாளர் உருவாக்கம், சமூகத்தொடர்பு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், கல்வி, நீதி..), தேவையில் இருப்போருக்கு பொருளுதவி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மறைப்பணி நாளிலும், புனித பூமிக் கிறிஸ்தவர்கள் மற்றும், தலத்திருஅவைக்காக புனித வெள்ளியன்றும் உண்டியல் எடுக்கப்படுகின்றது.
திருஅவை நம் அனைவருடையது, திருமுழுக்கு பெற்ற அனைவரும் இயேசுவின் திருஅவையாகும், ஆண்டவர் இயேசுவைப் பின்செல்பவர்கள் அனைவரும் அவரின் பெயரில், சிறியோர் மற்றும், துன்புறுவோருக்கு அருகிருந்து ஆறுதலும், உதவியும் அமைதியும் அளிக்கவேண்டும். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பொது மறைக்கல்வியுரையில் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்