தேடுதல்

திருத்தந்தையுடன் பேராயர்   Fortunatus Nwachukwu திருத்தந்தையுடன் பேராயர் Fortunatus Nwachukwu 

நெருக்கடிகள் களையப்பட, பலதரப்பு உரையாடல், ஒருமைப்பாடு தேவை

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், ஏழை நாடுகளில் உணவுப் பற்றாக்குறைவால் இயல்பாக ஏற்படும் சமூக நெருக்கடியில் புதிய பதட்டநிலைகளை உருவாக்கியுள்ளது - பேராயர் Nwachukwu

மேரி தெரேசா: வத்திக்கான்

இன்றைய உலகம் எதிர்கொள்கின்ற உலகளாவிய பிரச்சனைகளைக் களைவதற்கு, புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பு, மற்றும், ஒருமைப்பாட்டுணர்வு அவசியம் என்று, ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டின் 12வது அமைச்சர்கள் (M12) கருத்தரங்கில் கூறியுள்ளார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் இவ்வாரத்தில் நடைபெற்ற WTO எனப்படும் உலக வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய, அந்நகரிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும், பன்னாட்டு அமைப்புகளுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர்   Fortunatus Nwachukwu அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று, உக்ரைன் போர், காலநிலை மாற்றம் போன்றவை உருவாக்கியுள்ள நெருக்கடிகள் உட்பட, இவ்வுலகம் எதிர்கொள்கின்ற பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, நம் பொதுவான இல்லத்தில் பொது நலனை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று, பேராயர்  Nwachukwu அவர்கள் கூறியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பு, வர்த்தகம் சார்ந்த விவகாரங்களில் நாடுகளிடையே உரையாடலின் முக்கியத்துவத்தை ஊக்கப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசிய பேராயர் Nwachukwu அவர்கள், மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு, கட்டற்ற, சுதந்திரமான வர்த்தகம் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், வறிய நாடுகளில் உணவுப் பொருள்கள் மற்றும், மூலப் பொருள்களின் விலைகள் உயரக் காரணமாகியுள்ளது என்றும், அப்போர், உணவுப் பற்றாக்குறைவால் இயல்பாக ஏற்படும் சமூக நெருக்கடியில் புதிய பதட்டநிலைகளை உருவாக்கியுள்ளது என்றும் பேராயர் Nwachukwu அவர்கள் கவலை தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்குமுன், அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அய்ரஸ் நகரில் நடைபெற்றபின், உலக வர்த்தக மாநாட்டின் அமைச்சர்கள் கருத்தரங்கு, ஜூன் 12, இஞ்ஞாயிறு முதல் 16, இவ்வியாழன் வரை ஜெனீவாவில் நடைபெற்றது. இது, 2021ம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் கோவிட்-19ன் ஒமிக்கோன் நுண்கிருமி பரவியதால், இது கடந்த ஆண்டில் நடைபெறவில்லை.

உலக வர்த்தக அமைப்பின் 164 உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் மற்றும், மூத்த அதிகாரிகள், இந்த அமைச்சர்கள் கருத்தரங்கில் வழக்கமாக கலந்துகொள்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2022, 14:56