ஞாயிறு நாள்களின் புனிதம் மீண்டும் கண்டுணரப்படவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஞாயிறு நாள்களின் புனிதம் மீண்டும் கண்டுணரப்படவேண்டும், மற்றும், திருவழிபாடுகள் நிறைவேற்றப்படும்போது அதில் பங்குகொள்வோர் கடவுளைப் புகழவேண்டும் என்று, கர்தினாலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, திருவழிபாட்டுப் பேராயத்தின் தலைவர், பேராயர் ஆர்த்தூர் ரோச் அவர்கள் கூறியுள்ளார்.
தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, திருவழிபாடு, அருளடையாளங்கள், நற்செய்தி அறிவிப்பு ஆகியவை தொடர்பான பல்வேறு தலைப்புக்களில், ஜூன் 16 இவ்வியாழனன்று வத்திக்கான் செய்திகளிடம் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் பேராயர் ரோச்.
திருவழிபாடு மற்றும், திருப்பலி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், திருநற்கருணை, இயல்பிலேயே திருஅவை முழுவதையும் ஒன்றிணைக்கும் அருளடையாளம், ஆனால், ஞாயிறு திருப்பலிகளில் பங்குபெறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக ஐரோப்பாவில் குறைந்துவருவது கவலையளிக்கின்றது என்று கூறியுள்ளார். இதற்கு உலகப்போக்கு அதிகரித்து வருவதே காரணம் எனவும், திருவழிபாடு மற்றும், அருளடையாளங்களின் அழகு மீண்டும் கண்டுணரப்படவேண்டும் எனவும் கூறியுள்ள, புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் ரோச் அவர்கள், இலத்தீன் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
பணிக்குருத்துவம் திருஅவையின் மையத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கிய அவர், தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டபோது, தனது அறையில் ஏற்பட்டிருந்த மின்இணைப்பை சரிசெய்துகொண்டிருந்ததாகவும், திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலர் பேராயர் Vittorio Francesco Viola அவர்கள் தொலைபேசியில் அழைத்து தனக்கு வாழ்த்துத் தெரிவித்த பின்னரே அது பற்றி தெரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்